🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

அமீரகத்தில் இருந்து வெளியேறும் போது வங்கி கணக்கை மூடுவது எப்படி?

அமீரகத்தில் இருந்து தாய் நாட்டிற்கோ அல்லது பிற நாடுகளுக்கு இடம் பெயரும் போது அல்லது வேறு காரணங்களுக்காக வங்கிக் கணக்கை மூடும் போது, அதைச் சரியாகச் செய்யாவிட்டால் பின்னாளில் தேவையற்ற கட்டணங்களையும் சட்டச் சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். எனவே, இந்தச் செயல்முறையை முன்கூட்டியே தொடங்குவது நல்லது.

வங்கிக் கணக்கை மூடும் செயல்முறை 

நிலுவைத் தொகைகளைச் சரிசெய்தல்

உங்கள் கணக்கில் ஏதேனும் கடன்கள் அல்லது பாக்கிகள் இருந்தால் வங்கிகள் கணக்கை மூட அனுமதிக்காது. எனவே, கீழே உள்ளவற்றை முதலில் சரிசெய்யவும்:

  • உங்கள் கணக்கின் இருப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும்.
  • வாங்கிய கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும்.
  • கிரெடிட் கார்டுகள்  மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதிகளை முழுமையாகச் செலுத்தி, அவற்றை முதலில் மூட வேண்டும்.
  • நிலுவையில் உள்ள இதர கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தியிருக்க வேண்டும்.

இணைக்கப்பட்ட சேவைகளை ரத்து செய்தல்

  • உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள பின்வரும் சேவைகளை நிறுத்த வேண்டும் அல்லது வேறு கணக்கிற்கு மாற்ற வேண்டும்.
  • உங்கள் நிறுவனத்தில் இருந்து வரும் சம்பளப் பரிமாற்றம் 
  • வாடகை, மின்சாரம்/தண்ணீர் கட்டணம் போன்றவற்றுக்காக நீங்கள் அமைத்துள்ள நேரடிப் பணம் செலுத்தும் முறை
  • இதர மாதாந்திர தானியங்கிப் பணம் செலுத்துதல்
  • கணக்கில் மீதமுள்ள பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றிக் கொள்ளவும் அல்லது ரொக்கமாக எடுத்துக்கொள்ளவும்.

கணக்கை மூட விண்ணப்பித்தல்

  • வங்கி கிளைக்கு நேரில் செல்லுதல்: இதுவே மிகவும் பாதுகாப்பான மற்றும் வேகமான வழியாகும்.
  • ஆன்லைன் அல்லது மொபைல் ஆப்: Emirates NBD, ADCB போன்ற சில வங்கிகள் தங்களது ஆப் மூலமாக விண்ணப்பிக்க அனுமதிக்கின்றன. ஆனால், அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க சில நேரங்களில் கிளைக்கு வரச் சொல்லலாம்.

 கணக்கு மூடல் கடிதம் (Clearance Letter) பெறுதல்

அமீரகத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறீர்கள் என்றால், வங்கியிடமிருந்து “கணக்கு மூடப்பட்டுவிட்டது” என்பதற்கான உறுதிப்படுத்தல் கடிதம் (Account Closure/Clearance Letter) அல்லது “எந்தக் கடனும் இல்லை” என்பதற்கான சான்றிதழை (No-Liability Certificate) எழுத்துப்பூர்வமாக வாங்குவது மிகவும் முக்கியம்.

தேவையான ஆவணங்கள் 

வங்கி கணக்கை மூடும் போது சமர்ப்பிக்க வேண்டியவை:

அசல் எமிரேட்ஸ் ஐடி 

பாஸ்போர்ட் நகல் 

 செல்லுபடியாகும் விசா 

கணக்கு மூடல் படிவம் 

வங்கியில் திருப்பி ஒப்படைக்க வேண்டியவை:

டெபிட் கார்டு (Debit Card / ATM Card)

செக் புக் (Cheque Book) 

தேவைப்பட்டால் சமர்ப்பிக்க வேண்டியவை:

லோன் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருந்திருந்தால், அதற்கான “No-Liability” சான்றிதழ்.

உங்களுக்குப் பதிலாக வேறு யாராவது இந்த வேலையைச் செய்வதாக இருந்தால், அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் 

எவ்வளவு காலம் ஆகும்? 

  • எந்தவிதக் கடனோ அல்லது இதர சிக்கல்களோ இல்லாத எளிய கணக்குகள் அதே நாளில் மூடப்பட்டுவிடும்.
  • கிரெடிட் கார்டு, லோன் போன்ற வசதிகள் உள்ள சிக்கலான கணக்குகளை மூட சில வேலை நாட்கள் ஆகலாம்.
  • கணக்கு மூடப்பட்டவுடன் உங்கள் மொபைலுக்கு SMS அல்லது மின்னஞ்சல் வரும். அதை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கணக்கு மூடல் கட்டணங்கள் 

  • கணக்கு ஆரம்பித்து 6 முதல் 12 மாதங்களுக்குள் அதை மூடினால், AED 100 முதல் 105 வரை (VAT உட்பட) கட்டணம் வசூலிக்கப்படும்.
  • கணக்கு தொடங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டால், பொதுவாக கணக்கை மூடுவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.
  • கணக்கு அதிகாரப்பூர்வமாக மூடப்படுவதற்குள், உங்கள் கணக்கில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை குறைந்துவிட்டால், மாதத்திற்கு AED 25 முதல் AED 100 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தவிர்க்க வேண்டிய முக்கியத் தவறுகள் 

  • கிரெடிட் கார்டு ஆக்டிவாக இருந்தால் வங்கிக் கணக்கை மூட முடியாது. எனவே, முதலில் கார்டை ரத்து செய்ய வேண்டும்.
  • கணக்கில் பணத்தை முழுமையாக எடுத்த பிறகு, கணக்கு மூடும் செயல்முறை முடியும் வரை தாமதிக்கக் கூடாது. தாமதித்தால் ‘குறைந்தபட்ச இருப்புத் தொகை’ கட்டணம் ஏறிக்கொண்டே போகும்.
  • வேலையை விடும் போது அல்லது நாட்டை விட்டுப் போகும் போது, இறுதிச் சம்பளம் மற்றும் கருணைத் தொகை (Gratuity) வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்த பிறகே கணக்கை மூட வேண்டும்.
  • விசா ரத்து போன்றவற்றுக்கு  கணக்கு மூடல் கடிதம் தேவைப்படலாம். வங்கி இதைத் தானாகத் தராது, கேட்டுப் பெற வேண்டும்.