அமீரகத்தில் இன்று ஈத் அல் பித்ர் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஈத் அல் பித்ர் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
அதிபர் வாழ்த்து:
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில், “எனது சகோதரர்களான அமீரக ஆட்சியாளர்களுக்கும், அமீரக மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கும் மனமார்ந்த ஈத் அல் பித்ர் வாழ்த்துகள். பிராந்தியத்தில் தற்போது நிலவும் சவால்களை நாம் நிச்சயம் முறியடிப்போம்.
ஐக்கிய அரபு அமீரகம் தனது வலிமை, மீண்டெழும் திறன் (Resilience) மற்றும் மக்களின் ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் அமைதியான மற்றும் செழிப்பான எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
துபாய் ஆட்சியாளர் வாழ்த்து:
துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “ஒவ்வொரு ஆண்டும் நமது நாடு செழிப்பில் நிலைத்திருக்கட்டும்… ஒவ்வொரு ஆண்டும் நமது வளைகுடா நாடுகள் செழிப்பில் நிலைத்திருக்கட்டும்… ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய சமுதாயம் அமைதியிலும், நலனிலும் நிலைத்திருக்கட்டும்…
எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நற்செயல்களை இறைவன் ஏற்றுக் கொள்ளுமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம்… மேலும் பாதுகாப்பு, நிம்மதி மற்றும் அமைதியுடனும்… நிலைத்தன்மை, செழிப்பு மற்றும் மனநிறைவுடனும் இந்த நாட்களை மீண்டும் எங்களுக்கும் உங்களுக்கும் அவன் வழங்கட்டும்…
இறைவன் அமீரகத்தைப் பாதுகாப்பானாக… இறைவன் வளைகுடா நாடுகளைப் பாதுகாப்பானாக… இறைவன் அரபு மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தைப் பாதுகாப்பானாக.” என்று குறிப்பிட்டுள்ளார்.
துபாய் இளவரசர் வாழ்த்து:
துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “ஈகைத் திருநாளாம் ஈத் அல் பித்ர் நன்னாளில், எமது தலைமைத்துவத்திற்கும், எமது மக்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை தங்களது இல்லமாகக் கருதி வாழும் அனைவருக்கும் மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், எமது தாயகத்தைப் பாதுகாத்து, அதன் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் எமது வீரர்களுக்கு எங்களது ஆழமான நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
