இதுவரை நடைபெற்ற தாக்குதல் & பலி எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட்ட அமீரகம்!

அமீரகத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கிடையில் இதுவரை 6 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும், மேலும் 157 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமீரகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் எண்ணிக்கை:

ஈரான் தரப்பிலிருந்து 2,001-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாக அமீரகம் தெரிவித்துள்ளது. 

இதில் 314 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1,672 ட்ரோன்கள் மற்றும் 15 குரூஸ் ஏவுகணைகள் அடங்கும்.

அமீரகத்தின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் இவற்றில் பெரும்பாலானவற்றை இடைமறித்து அழித்துள்ளன.

உயிரிழப்புகள் மற்றும் சேதம் 

இந்தத் தாக்குதல்களால் துரதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமீரக ஆயுதப்படையைச் சேர்ந்த 2 வீரர்கள் தியாகம் அடைந்துள்ளனர். சுமார் 157 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் பாகங்கள் விழுந்ததில் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் இதுவரை பாகிஸ்தான், பாலஸ்தீனம், வங்க தேசம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 6 வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததாக அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஆதரவு மற்றும் தூதரக நடவடிக்கைகள்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் (UN Security Council) தீர்மானம் 2817-ஐ நிறைவேற்றி, ஈரானின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுமார் 126 நாடுகள் அமீரகத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

அமீரக அதிபர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் உலகத் தலைவர்களுடன் 100-க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் மற்றும் சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

பொருளாதாரம் மற்றும் சுற்றுலா

தாக்குதல்கள் நடந்த போதிலும், அமீரகத்தின் பொருளாதாரம் நிலையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75% ஜிடிபி (GDP) எண்ணெய் அல்லாத துறைகளில் இருந்து வருகிறது.

அமீரகத்தின் இறையாண்மை நிதி (Sovereign Wealth Funds) 2.49 டிரில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது, இது உலக அளவில் மூன்றாவது இடமாகும்.

சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து சாதாரணமாக இயங்குகிறது. மார்ச் 1 முதல் 12 வரை சுமார் 1.4 மில்லியன் பயணிகள் அமீரக விமான நிலையங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

அமீரகத்தின் பாதுகாப்பு திறன் 

  • அமீரகத்தின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகள், பெரும்பாலான தாக்குதல்களை வானிலேயே இடைமறித்து அழித்துள்ளன. இது உயிரிழப்புகளையும் சேதங்களையும் பெருமளவு குறைத்துள்ளது.
  • நீண்ட காலத்திற்கு தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் அமீரகத்திடம் போதுமான ஆயுதக் கையிருப்பு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காக்க முழு தயார் நிலையில் உள்ளது.
  • குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் பல அடுக்கு வான் பாதுகாப்பு (Multi-Layer Air Defense) முறையைப் அமீரகம் பயன்படுத்துகிறது. இது நாட்டின் வான்வெளியை முழுமையாக பாதுகாக்கிறது.

சமூக வலைதளங்களில் வதந்திகள், பொய்ச் செய்திகள் அல்லது தெரியாத மூலங்களிலிருந்து வரும் தகவல்களைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும் என்று அமீரகம் அரசு எச்சரித்துள்ளது. 

TAGGED: