அமீரகத்தில் வேலையை விட்டு விலகுகிறீர்களா? உங்களுக்குக் பணிக்கொடை பணம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

2023ஆம் ஆண்டு, அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களின் சேமிப்பை பாதுகாக்கும் நோக்கில், மேம்படுத்தப்பட்ட பணி ஓய்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அமீரகத்தில் தனியார் நிறுவனங்களில் நீண்ட காலமாக பணியாற்றி வேலைவிட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை (Gratuity) வழங்கப்படுகிறது. அமீரக தொழிலாளர் சட்டத்தின் படி, குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், வேலைவிட்டு வெளியேறும் போது நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இந்த பணிக்கொடையை வழங்குவது கட்டாயமாகும். 

2023ஆம் ஆண்டு முதல், தனியார் துறை ஊழியர்களின் சேமிப்பை பாதுகாக்கும் வகையில் புதிய பணிக்கொடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் விருப்பத் தேர்வாகும். இதில், தனியார் முதலீட்டு மற்றும் சேமிப்பு நிதிகள் மூலம் ஊழியர்களின் பணம் பாதுகாக்கப்படுகிறது. 

இருப்பினும், பணிக்கொடையை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்து பலருக்கு குழப்பம் இருந்து வருகிறது. ஆனால், அந்த செயல்முறை மிகவும் எளிமையானதாகும்.

பணிக்கொடை கணக்கிடும் முறை 

பணிக்கொடை உங்கள் அடிப்படை சம்பளத்தை (Basic Salary) வைத்து மட்டுமே கணக்கிடப்படும். வீடு, போக்குவரத்து போன்ற இதர படிகள் (Allowances) இதில் சேர்க்கப்படாது.

  • ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்தால் ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்களுக்கான அடிப்படை சம்பளம் பணிக்கொடையாக வழங்கப்படும்.
  • 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 21 நாட்கள் சம்பளமும் அதன் பிறகு ஒவ்வொரு கூடுதல் ஆண்டிற்கும் 30 நாட்களுக்கான அடிப்படை சம்பளமும் வழங்கப்படும்.
  • மொத்த பணிக்கொடை தொகையானது உங்களின் இரண்டு வருட மொத்த சம்பளத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.
  • ஒரு வருடத்திற்கும் குறைவாக பணியாற்றியிருந்தால், உங்களுக்கு பணிக்கொடை பெற உரிமை இல்லை.
  • நீங்கள் எடுத்த சம்பளம் இல்லாத விடுமுறை நாட்கள் (Unpaid Leave) பணிக்கொடை கணக்கீட்டில் சேர்க்கப்படாது. 
  • சட்டப்படியோ அல்லது நீதிமன்ற தீர்ப்பின் மூலமோ ஒரு ஊழியர் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி, அந்த ஊழியரின் பணிக்கொடை தொகையிலிருந்து முதலாளி கழித்துக்கொள்ள உரிமை உண்டு. 

துபாய் மேம்பாட்டு ஆணையத்தின் Dubai Development Authority இணையதளத்தில் https://dda.gov.ae/en/gratuity-calculator/gratuity-calculator உள்ள கிராஜுவிட்டி கால்குலேட்டரை (Gratuity Calculator) பயன்படுத்தி உங்கள் பணிக்கொடை தொகையை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். அதற்காக, உங்களின் வேலை தொடங்கிய தேதி, வேலை நிறைவு தேதி மற்றும் அடிப்படை சம்பளம் ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும்.

TAGGED: