‘Non-Segmental Vitiligo’ என்ற வெண்புள்ளி நோய்க்கான மாத்திரைக்கு அமீரகம் முதல் நாடாக ஒப்புதல் அளித்துள்ளது.
வெண்புள்ளி (Vitiligo) நோய்க்கான RINVOQ (upadacitinib) என்ற புதிய மாத்திரையின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக அமீரகம் திகழ்கிறது.
இதுதொடர்பாக எமிரேட்ஸ் மருந்து நிறுவனம் (EDE) வெளியிட்டுள்ள அறிவிப்பில், Non-segmental வகை வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் பதின்ம வயதினருக்கு இந்த மருந்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரையின்படி, இந்த மருந்தை தினமும் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம்.
அமீரகத்தின் மேம்பட்ட மருத்துவ கட்டமைப்பு
RINVOQ மாத்திரையின் பயன்பாட்டை உலகின் மற்ற நாடுகளுக்கு முன்பாகவே அங்கீகரிக்க அமீரகம் எடுத்துள்ள முடிவு, சமீபத்திய மருந்துத் துறை கண்டுபிடிப்புகளை விரைவாக ஏற்றுக்கொள்வதிலும், அவை நோயாளிகளுக்கு உடனடியாகக் கிடைப்பதை உறுதி செய்வதிலும் அமீரகத்தின் முன்னணி நிலையை வெளிப்படுத்துகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய அறிவியல் முன்னேற்றங்களுக்கு ஏற்ப செயல்படும் மேம்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் மருந்து நிறுவனம் (EDE) தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, அமீரகத்தின் மருந்துத் துறையை மேலும் வலுப்படுத்துவதுடன், நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வாய்ப்புகளை விரைவாகக் கிடைக்கச் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
