பாஸ்போர்ட் சோதனை, நீண்ட வரிசை இனி இல்லை; துபாய் விமான நிலையத்தின் பிரம்மாண்ட ஸ்மார்ட் திட்டம்!

விமான நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பது, பாஸ்போர்ட் சரிபார்ப்பு, பைகளை சோதனைக்குத் தனித்தனியாக எடுப்பது போன்ற பாரம்பரிய முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் திட்டமிட்டுள்ளது துபாய். 

துபாய் விமான நிலையத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பால் கிரிஃபித்ஸ் (Paul Griffiths), அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் (DWC) அறிமுகப்படுத்தப்பட உள்ள எதிர்கால விமான பயணக் தொலைநோக்குத் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

“பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழையும் போது, ஒரு விமான நிலையத்தில் இருப்பதாகவே உணரக் கூடாது” என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என பால் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் இல்லாத தடையற்ற பரிசோதனை

இனி பயணிகள் செக்-இன் (Check-in) கவுண்டர்களில் நிற்க வேண்டிய அவசியமில்லை. டிக்கெட் வாங்கும்போதே பயணிகளின் அனைத்துத் தகவல்களும் பதிவு செய்யப்படும். விமான நிலையச் சுவர்கள் மற்றும் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் பயணிகளின் முகங்களை அடையாளம் கண்டு அனுமதிக்கும். இதனால் பாஸ்போர்ட்டைக் காட்ட வேண்டிய தேவையும், வரிசையில் நிற்கும் சூழலும் தவிர்க்கப்படும்.

ஸ்மார்ட் லக்கேஜ் & மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புச் சோதனை

தற்போதைய விமான நிலைய அமைப்பில் உள்ள நடைமுறைச் சிரமங்களை நீக்கப் புதிய முறைகள் அறிமுகமாகின்றன. காகித பேக்கேஜ் டேக்குகளுக்குப் பதிலாக, கார்களுக்கு வழங்கப்படுவது போன்ற தனித்துவ அடையாள எண்கள் (Unique Identity) சூட்கேஸ்களுக்கு வழங்கப்படும்.

கை பைகளில் உள்ள லேப்டாப்கள் அல்லது திரவப் பொருட்களை (Laptops & Liquids) வெளியே எடுக்க வேண்டியதில்லை. மேலும், பைகளைத் தரையோடு அமைக்கப்பட்ட நகரும் பட்டைகளில் (Conveyor Belts) வைத்துக்கொண்டே பயணிகள் தடையின்றி நடந்து செல்லலாம்.

ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக விமானம் வரை

ரயிலில் வரும் பயணிகள் இறங்கியவுடன் நேரடியாக ஓய்வறைகள் (Lounges), உணவகங்கள் அல்லது கடைகளுக்குச் சென்று, அங்கிருந்து வெறும் 50 மீட்டருக்குள் நேரடியாக விமானத்தில் ஏறும் வகையில் சாலை மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் (RTA) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

2032-இல் உலகின் மிகப்பெரிய விமான நிலையம்

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) அனைத்துச் செயல்பாடுகளும் படிப்படியாக அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு (DWC) மாற்றப்படும். இதற்கான முதல்கட்ட பணிகள் 2032-இல் தொடங்கும். இத்திட்டம் முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, ஆண்டிற்கு 26 கோடி (260 million) பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக அல் மக்தூம் திகழும்.

 பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தி, சிரமமில்லாத டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதோடு, கட்டமைப்புச் செலவுகளையும் குறைப்பதே இந்த விண்வெளிப் போன்ற தொழில்நுட்ப மாற்றங்களின் முதன்மை நோக்கமாகும் என துபாய் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TAGGED: