ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வாழும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் வசதிக்காக, பாஸ்போர்ட் பெறுவதற்கான சேவையை அல்ஹிந்த் குளோபல் சர்வீசஸ் (Alhind Global Services) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தியர்கள் தங்களது பாஸ்போர்ட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் சேவை
அமீரகத்திலுள்ள 16 இந்திய தூதரக விண்ணப்ப மையங்களையும் (ICAC) அல்ஹிந்த் நிறுவனமே சேவைகளை வழங்கி வருகிறது. வேலை நாட்களில் பணிச்சுமை காரணமாக பாஸ்போர்ட்டை பெற, வர முடியாதவர்களுக்காக, அனைத்து 16 மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பாஸ்போர்ட் விநியோக கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தச் சேவை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை செயல்படும்.
கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் அல்ஹிந்த் நிறுவனம் தூதரகச் சேவைகளைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறது. தொடக்கத்தில் நிலவிய சட்டப் போராட்டங்கள் காரணமாகச் சில தாமதங்கள் ஏற்பட்ட போதிலும், தற்போது 100 சதவீத நிலுவை மனுக்களும் (Backlogs) முழுமையாகச் சரிசெய்யப்பட்டு விட்டதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது அனைத்து மையங்களிலும் முன்பதிவுகள் (Appointments) எளிதாகக் கிடைக்கின்றன.
சேவைக் கட்டணம் மற்றும் வசதிகள்:
படிவம் நிரப்புதல், புகைப்படம் எடுத்தல், நகல் எடுத்தல் மற்றும் கூரியர் சேவைகள் உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் சேர்த்து ஒரே கட்டணமாக AED 19 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளி முகவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
முன்பதிவு மற்றும் செயல்பாட்டு நேரம்:
- முன்பதிவு: திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 9:00 மணி மற்றும் இரவு 9:00 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு நேரங்கள் (Slots) வெளியிடப்படும்.
- மைய நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மையங்கள் இயங்கும். முன்பதிவு செய்த நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- பர் துபாய் மையம்: அதிகமான கூட்ட நெரிசலைத் தவிர்க்க பூர் துபாய் மையத்தில் மட்டும் 45 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகக் கட்டணம் வசூலிக்கும் போலியான மூன்றாம் தரப்பு முகவர்களிடம் (Third-party agents) ஏமாறுவதைத் தவிர்க்குமாறு துபாய்க்கான இந்தியத் துணைத் தூதர் டாக்டர் ஈ. விஷ்ணு வர்தன் ரெட்டி இந்தியச் சமூகத்தினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
