அமீரகத்தில் வெப்பமும் மழையும் அதிகரிக்கும்… NCM எச்சரிக்கை!

எல் நினோ தாக்கத்தால் அமீரகத்தில் வானிலை மாற்றங்கள் தீவிரமடையும் என்று NCM தெரிவித்துள்ளது. 

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள El Nino காலநிலை மாற்றம் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என்றும், இதன் காரணமாக அமீரகத்தில் அதன் தாக்கம் 2027 ஏப்ரல் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது என்றும் அமீரக தேசிய வானிலை மையம் (NCM) எச்சரித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அமீரகத்தில் வழக்கம் மாறாக வெப்பநிலையும், மழைப்பொழிவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பமும் மழையும் அதிகரிக்க வாய்ப்பு

2026 அக்டோபர் முதல் 2027 பிப்ரவரி வரை எல் நினோ நிகழ்வு தீவிரமாக நிலவுவதற்கு 99 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலைத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் கடல்மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 3°C வரை அதிகரித்து, மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வு உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அக்டோபர் முதல் 2027 பிப்ரவரி வரையிலான காலத்தில் அமீரகத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பமும், பலத்த மழைப்பொழிவும் பதிவாகக்கூடும். எல் நினோ பிப்ரவரியில் குறைந்தாலும், அமீரக வானிலையில் அதன் தாக்கம் ஏப்ரல் 2027 வரை நீடிக்கும்.

உலக வானிலை அமைப்பின் எச்சரிக்கை

உலக வானிலை அமைப்பான (WMO), எல் நினோ நிகழ்வு 2027 பிப்ரவரி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், 2026ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அது மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளது. 

பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிப்பதே ‘எல் நினோ’ எனப்படுகிறது. இதன் காரணமாக உலகளாவிய காற்று சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, உலகின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான வறட்சி, கனமழை மற்றும் வெப்ப அலைகள் ஏற்படக்கூடும்.

TAGGED: