கல்பாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், புதிய கடற்கரைத் திட்டம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க Kalba Rock Art Centre பணிகள் தீவிரம். 2027 புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
Kalba Beach
ஷார்ஜா முதலீடு மற்றும் மேம்பாட்டு வாரியமான Shurooq, 700 மீட்டர் நீளமுள்ள கல்பா கடற்கரைத் திட்டத்தின் மேம்பாட்டுப் பணிகள் 75% நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான 11 இடங்கள், உணவகங்கள், கஃபேக்கள், நடைபயிற்சி மற்றும் மிதிவண்டிப் பாதைகள், விளையாட்டு மைதானங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட இத்திட்டம், 2026 டிசம்பருக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kalba Rock Art Centre
பொதுப்பணித் துறையால் Khatm Al Melaha தொல்லியல் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் ‘Kalba Rock Art Centre’ 2027ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள 150 பாறை அமைப்புகளில், புதிய கற்காலம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான 400-க்கும் மேற்பட்ட தொல்லியல் பாறைச் செதுக்கல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த மையத்தில் நிரந்தரக் கண்காட்சி, விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) அனுபவங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பகுதிகள் அமைக்கப்பட உள்ளன.
ஷார்ஜா ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்பவும், Shurooq தலைவர் ஷைகா பதூர் பின்ட் சுல்தான் அல் காசிமியின் வழிகாட்டுதலின்படியும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2027 புத்தாண்டு வானவேடிக்கை
கல்பாவின் இயற்கை, கடற்கரை மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை ஒன்றிணைத்து, உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் உள்ளூர் வணிகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கம் என Shurooq-இன் தலைமைச் செயல் அதிகாரி ஹெச்.இ. அஹமத் உபைத் அல் காசிர் தெரிவித்துள்ளார்.
மேலும், சூரிய சக்தி மற்றும் மறுசுழற்சிப் பொருட்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உருவாக்கப்படும் கல்பா கடற்கரையில், 2027 புத்தாண்டை முன்னிட்டு வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
