போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல், தவறான பாதையில் சென்றால் AED 400 அபராதம் விதிக்கப்படும் என அஜ்மான் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறி, தவறான பாதையில் சென்று விபத்தை ஏற்படுத்தினாலோ, அந்த விபத்தால் யாருக்காவது காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டால் அபராதத் தொகை மேலும் உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான பாதையில் வாகனத்தை இயக்கினால்?
சாலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாதையில் செல்லாமல், வேறு திசையில் சென்றால் AED 400 அபராதமாக விதிக்கப்படும். சாலை விதிகளை மீறி தவறான திசையில் சென்றால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அஜ்மான் காவல்துறை எச்சரித்துள்ளனர்.
அஜ்மான் காவல்துறை வெளியிட்ட வீடியோ!
இதனை விளக்கும் வகையில், அஜ்மான் காவல் துறையினர் செப்.17 அன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில், வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டும் போது சரியான லேன்களில் (பாதைகளில்) செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்களை பாதுகாத்துக்கொள்வதோடு, சாலையில் செல்லும் பிறருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவில் மூன்று சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் இடது பக்கம் திரும்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் பாதையில், இடது பக்கம் திரும்பாமல் நேராக சென்றதால் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
முதல் சம்பவத்தில், இடதுபுற ஓரத்தில் உள்ள கார், இடமாக திரும்ப வேண்டிய இடத்தில் நேராகச் செல்வதால், அடுத்த லேனில் திரும்பும் காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அடுத்த வீடியோவில், இதுபோல இடதுபுறம் திரும்ப வேண்டிய வாகனம் நேராகச் செல்வதால் செய்வதறியாது ஒரு டெலிவரி ஊழியர் தனது இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.
இந்த வீடியோவை வெளியிட்டு, இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டால், விபத்தின் தீவிரத்தைப் பொறுத்து அபராதத் தொகை கணிசமாக உயரும் என எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு காவல் துறைகள், பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை மீறும்போது ஏற்படும் ஆபத்துகளை உணர்த்துவதற்காக இதுபோன்ற வீடியோக்களை அடிக்கடி வெளியிடுகின்றன.
