US – Iran பதற்றம் தீவிரம்: அமீரக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகள் முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை(Strait of Hormuz) மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதல்

ஜூலை 12-ஆம் தேதி, அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு பகுதிகளில் புதிய தாக்குதல்களை நடத்தியது. இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் மையங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், கடல்சார் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சிறிய படகுகள் ஆகியவை இலக்காக வைக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.

ஈரானின் பதிலடி

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டனில் உள்ள ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் Revolutionary Guard (IRGC) தெரிவித்துள்ளது. மேலும், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் இலக்காகக் கொண்டு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை ஏன் முக்கியம்?

ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள Strait of Hormuz, உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகும். உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயில் குறிப்பிடத்தக்க பகுதி இந்த வழியாக செல்கிறது. இந்த பாதையில் ஏற்படும் எந்த பாதிப்பும் உலக எண்ணெய் சந்தை மற்றும் சர்வதேச வர்த்தகத்தை நேரடியாக பாதிக்கும்.

வளைகுடா நாடுகளின் நிலை

அமீரக வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்ததாக தெரிவித்துள்ளது. பின்னர், நாட்டின் எல்லைக்கு வெளியே அச்சுறுத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

குவைத் வான்வெளிக்குள் நுழைந்த வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறித்து அழித்ததாக ஆயுதப்படை தெரிவித்துள்ளது.

கத்தார், தாக்குதலுக்குப் பிறகு விழுந்த உலோகத் துண்டுகளால் குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாக அறிவித்துள்ளது.

ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழுந்ததாக ஜோர்டன் தெரிவித்துள்ளது. 

ஓமன், முசந்தம் (Musandam) பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ள நிலையில், உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

எண்ணெய் விலை உயர்வு

புதிய தாக்குதல்களும் ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பதற்றமும் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) ஒரு பீப்பாய்க்கு 3%க்கும் மேல் உயர்ந்த நிலையில், உலக எரிசக்தி சந்தையில் புதிய கவலை உருவாகியுள்ளது.

ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் கருத்து

ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு , மோதலை உடனடியாக நிறுத்துமாறு இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்திய பதற்றத்திற்கு முன்பு இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருக்கமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அமீரக மக்கள் கவனிக்க வேண்டியது

விமானப் பயணத்திற்கு முன் விமான நிறுவனங்களின் சமீபத்திய அறிவிப்புகளை சரிபார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அமீரக அரசு மற்றும் அவசரகால அமைப்புகள் வெளியிடும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான புதிய முன்னேற்றங்கள் எண்ணெய் விலை மற்றும் பிராந்திய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதிகாரப்பூர்வ அப்டேட்களை தொடர்ந்து கவனிக்கவும்.

தற்போது அமீரகத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொது வாழ்க்கை வழக்கம்போல நடைபெற்று வருகிறது. இருப்பினும், பிராந்திய சூழ்நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

TAGGED: