தங்கத்தின் தூய்மையைச் சோதிக்க புதிய டெக்னிக்; துபாயில் அறிமுகம்!

தங்கத்தின் தூய்மையை சோதிப்பதற்கான உலகின் முதல் சுயமாகச் செயல்படும் ‘ஸ்மார்ட்’ ஆய்வக சாதனம் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை துபாய் நகராட்சியின் ஒரு பிரிவான துபாய் மத்திய ஆய்வகம் (Dubai Central Laboratory – DCL) வெளியிட்டுள்ளது.

தங்கத்தின் தூய்மையை சோதிக்க புதிய முறை

துபாய் நகராட்சி Gitex 2025 கண்காட்சியின் முதல் நாளில், நகைகளின் தூய்மையை சோதிக்கும் ஒரு புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரக  குடியிருப்பாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்கள் தங்கம், வெள்ளி, அல்லது பிளாட்டினம் நகைகளின் தூய்மையை வெறும் 1 நிமிடங்களுக்குள் சோதித்து அறிய முடியும்.

இந்த புதிய முறைக்கு, ஸ்மார்ட் கோல்ட் அண்ட் ஜுவல்லரி டெஸ்டிங் லேப் (Smart Gold and Jewellery Testing Lab) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலகின் முதல் சுய சேவை (Self-Service) சோதனை வழங்கும் ஆய்வகங்களில் ஒன்றாகும்.

  • இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.
  • இந்தத் தொழில்நுட்ம் சோதனையின் வேகத்தை அதிகரிப்பதோடு, அதன் துல்லியத்தையும், செயல்திறனையும் உறுதி செய்கின்றன.
  • நகையின் தூய்மையை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், இந்தச் சோதனை நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு AED 40 கட்டணம் செலுத்த வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளுக்காக 

சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டது. தற்போதுள்ள மத்திய ஆய்வகத்தில் சோதிக்க 7 நாட்கள் ஆகும். ஆனால், இந்தச் சுய சேவை சோதனை முறை மூலம் உடனடியாக முடிவுகளை பெற முடியும் என துபாய் மத்திய ஆய்வு துறையின் இயக்குநர் ஹிந்த் மஹ்மூத் கூறியுள்ளார்.  

GITEX Global 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த சாதனம் துபாய் மத்திய ஆய்வகமும், முன்னணி வர்த்தகர்கள் அடங்கிய துபாய் தங்கம் மற்றும் நகை குழுமமும் (Dubai Gold and Jewellery Group) இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. 

இந்தச் சாதனத்தின் முதல் வடிவம், துபாயின் புகழ்பெற்ற கோல்ட் சூக்கில் (Gold Souk) நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இது துபாய் முழுவதும் உள்ள முக்கிய மால்களில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

இந்த கண்டுபிடிப்பு, விலைமதிப்பற்ற உலோகச் சோதனையில் வேகம், துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு ஒரு புதிய உலகளாவிய தரத்தை நிறுவுவதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.