போலி மற்றும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுத்து, உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க Dubai Media Narrative Committee என்ற புதிய ஊடகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியின் பாதையில் வேகமாகப் பயணித்து வரும் துபாய் அரசு, போலிச் செய்திகள் மற்றும் தவறானத் தகவல்களை எதிர்த்துப் போராடவும், துபாயின் வளர்ச்சிச் சாதனைகளைப் பாதுகாக்கவும் ஒரு புதிய ஊடகக் குழுவை அமைத்துள்ளது.
துபாய் ஊடக கவுன்சிலின் தலைவர் மாண்புமிகு ஷேக் அஹ்மத் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘துபாய் ஊடக விவரிப்புக் குழு’ (Dubai Media Narrative Committee)
இந்த புதிய குழுவிற்கு துபாய் ஊடக கவுன்சிலின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மோனா கானம் அல் மர்ரி தலைமை தாங்குவார். ‘துபாய் ஊடக விவரிப்புக் குழு’ (Dubai Media Narrative Committee) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்குழு, துபாயின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகளின் பின்னணியையும், தகவல்பரிமாற்றக் கொள்கைகளையும் வடிவமைக்கும்.
இக்குழுவின் முக்கியப் பணிகள்:
- துபாயின் ஊடகத் தகவல்தொடர்புகளுக்கான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்மொழிந்து துபாய் ஊடக கவுன்சிலிடம் ஒப்படைத்தல்.
- ஒப்புதல் பெறப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், அவற்றின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்தல்.
- தவறானத் தகவல்களுக்குப் பதிலாகத் துல்லியமான, வெளிப்படையான தகவல்களை உலகிற்கு உடனடியாகக் கொண்டு சேர்ப்பது.
இக்குழுவின் உருவாக்கம் குறித்துப் பேசிய ஷேக் அஹ்மத், “துபாயின் வளர்ச்சிப் பயணத்திற்கு ஒரு பலமான ஊடகத் தகவல்தொடர்பு மிக முக்கியத் தூணாக மாறியுள்ளது. துபாயின் தலைசிறந்த படைப்பாற்றல் மற்றும் அறிவுசார் வளங்கள், நமது தலைவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப ஒரு தெளிவான மற்றும் பயனுள்ள ஊடகக் கட்டமைப்பை உருவாக்க உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன” என்று தெரிவித்தார்.
வெளிப்படையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம், போலிச் செய்திகளால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்த்து, துபாயின் உலகளாவிய நற்பெயரை மேலும் உயர்த்த இக்குழு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
