குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் துபாய் காவல்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 10 வயது சிறுவனின் புகாரின் பெயரில், சிறுவனது தந்தையை எச்சரித்துள்ளது துபாய் காவல்துறை.
காயங்களுடன் 10 வயது சிறுவன்:
பள்ளியில் 10 வயது சிறுவன் ஒருவன் காயங்களுடன் இருந்ததைக் கண்ட சமூகப்பணியாளர், சிறுவனிடம் விசாரித்துள்ளார். அப்போது சிறுவனது தந்தை, சிறுவனை அடித்து துன்புறுத்தி வருவதை அறிந்த சமூகப்பணியாளர், துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் ஆப்பை பயன்படுத்தி, ரகசியமாக புகார் அளிக்கச் செய்தார்.
தீங்கிழைக்கும் நோக்கில்லை – தந்தை வாக்குமூலம்!
சிறுவனது புகாரை ஏற்றுக்கொண்ட துபாய் காவல்துறை, சிறுவனது தந்தையை விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணையில், மகனை அடித்ததாக ஒப்புக்கொண்ட தந்தை, தீங்கு விளைவிக்கும் நோக்கில், இவ்வாறு செய்யவில்லை என்றும், சிறுவனை வலிமையானவனாக மாற்றுவதற்காகவே செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களது பேச்சுக்கு செவி சாய்க்க மருத்துவர் வலியுறுத்தல்:
இதனைத் தொடர்ந்து மருத்துவர் அல் மாட்ரூஷி, தந்தையின் செயலால் சிறுவன், தனிமை மற்றும் பயத்தை எதிர்கொள்வதாகவும், படிப்பில் பின்தங்கியதாகவும் வருத்தத்துடன் கூறினார். குழந்தைகளைப் பாதுகாக்கவும், அவர்களது பேச்சுக்கு செவிசாய்க்கவும் வேண்டும் என்று வலியுறுத்திய மருத்துவர், துபாய் காவல்துறை சிறுவனுக்கு மனநல ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கும் என உறுதியளித்தார்.
தந்தைக்கு காவல்துறையினர் எச்சரிக்கை:
காவல்துறையினர் தந்தையிடம் அவரது வளர்ப்பு முறைகள் தீங்கு விளைவிப்பவை என்றும், சட்டவிரோதமானவை என்றும் தெளிவுபடுத்தினர். அத்தகைய செயல்கள் சட்டப்படி தண்டனைக்குரியவை என்றும் எச்சரித்தனர். தனது தவறை உணர்ந்த தந்தை, தனது நடத்தையை மாற்றிக்கொள்வதாக உறுதியளித்தார். குழந்தைகள் பாதுகாப்பு குழு இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் குழந்தைகளுக்கு எதிரான எந்தவித வன்முறையையோ அல்லது உரிமை மீறல்களையோ உடனடியாகப் புகாரளிக்கலாம் என துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. அமீரகத்தின் ‘வாடிமா’ (Wadeema) சட்டத்தின் கீழ், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான பொதுத் துறையுடன் தொடர்பு கொள்ளும் வழிகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன.
குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதத் தாக்குதல் அல்லது துன்புறுத்தல் சம்பவங்களையும் விரைந்து தெரிவிப்பதன் மூலம், துரித நடவடிக்கை எடுத்து தேவையான உதவிகளை வழங்க முடியும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
புகார் அளிப்பது எப்படி?
காவல் துறை செயலி, இணையதளம் அல்லது 901 என்ற அவசர உதவி எண் மூலமாக ரகசியமாகப் புகார் அளிக்கலாம். அதுமட்டுமல்லாமல், அல் த்வார் காவல் தலைமையகத்தில் உள்ள சைல்ட் ஒயாசிஸ் சென்டருக்கு (Child Oasis center) நேரடியாகச் சென்று புகார் தெரிவிக்கலாம்.
