NRI-கள் இந்தியாவில் ‘e-Gate’ வசதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இப்போது 13 இந்திய விமான நிலையங்களில் ‘e-Gate’ வசதிக்கு பதிவு செய்து, குடிவரவு செயல்முறையை வேகமாக முடிக்கலாம்.

இந்திய விமான நிலையங்களில் குடிவரவு சோதனைக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. வெளிநாடுவாழ் இந்தியர்கள்  இனிமேல் ‘e-Gate’ வசதி மூலம், ஒரு சில நிமிடங்களில் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லலாம். 

இந்த Fast Track Immigration – Trusted Traveller Programme (FTI-TTP) வசதி தற்போது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், லக்னோ, அமிர்தசரஸ், கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் மற்றும் திருச்சி ஆகிய 13 விமான நிலையங்களில் உள்ளது. இதில் கேரளாவில் உள்ள மூன்று விமான நிலையங்களும் அடங்கும்.

ஆனால், ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், பதிவு செய்யும்போது முகவரிச் சான்றாக (Address Proof) ஆதார் அட்டை (Aadhaar Card) ஏற்கப்படாது.

e-Gate சேவை என்றால் என்ன?

இந்த e-Gate வசதியை இந்திய உள்துறை அமைச்சகத்தின் குடிவரவுப் பணியகம் (Bureau of Immigration – BoI) அறிமுகப்படுத்தியுள்ளது. இது, முன்பே சரிபார்க்கப்பட்ட பயணிகள், சுய-சேவை கியோஸ்க்குகளைப் (Self-service Kiosks) பயன்படுத்தி விரைவாக குடிவரவு சோதனையை முடிக்க உதவுகிறது. நீண்ட வரிசையில் நிற்பதற்குப் பதிலாக, பயணிகள் தங்களது பாஸ்போர்டை ஸ்கேன் செய்து, கைரேகை  மற்றும் முகத்தை பதிவு செய்துவிட்டு எளிதில் வெளியே செல்லலாம்.இது துபாய் விமான நிலையங்களில் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் யார் பதிவு செய்யலாம்?

இந்த வசதியை இரண்டு வகையான பயணிகள் பயன்படுத்தலாம்:

  • இந்திய நாட்டவர்கள் (Indian Nationals).
  • வெளிநாட்டு குடிமகன் அட்டை (Overseas Citizen of India – OCI Card) வைத்திருக்கும் வெளிநாட்டு நாட்டவர்கள்.

ஆதார் அட்டை ஏன் ஏற்கப்படாது?

ஆதார் அட்டை ஒரு முக்கியமான இந்திய அடையாள ஆவணமாக இருந்தாலும், e-Gate பதிவுக்காக இது முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. “ஆதார் அட்டை முகவரிச் சான்றுக்கு ஏற்கத்தக்கது அல்ல” என்று இணையதளத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. NRI-கள் மற்றும் OCI அட்டைதாரர்களுக்கு, கடவுச்சீட்டில் உள்ள முகவரிப் பக்கமே முகவரிச் சான்றாக ஏற்கப்படுகிறது.

ஏற்றுக்கொள்ளப்படும் பிற முகவரிச் சான்றுகள்

ஆதார் அட்டையைத் தவிர, பின்வரும் ஆவணங்கள் முகவரிச் சான்றாக ஏற்கப்படுகின்றன:

  • தேர்தல் புகைப்பட அடையாள அட்டை 
  • கடைசி மூன்று மாதங்களுக்குள் உள்ள மின்சார அல்லது தொலைபேசி  பில்
  • ஓட்டுநர் உரிமம் 
  • மனைவி/கணவரின் கடவுச்சீட்டின் நகல் (விண்ணப்பதாரரின் முகவரி, மனைவியின்/கணவரின் கடவுச்சீட்டில் உள்ள முகவரியுடன் ஒத்துப் போனால்).
  • சிறார்களுக்கு பெற்றோரின் கடவுச்சீட்டின் நகல்.
  • வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு, அவர்களின் தற்போதைய வெளிநாட்டு முகவரியைக் காட்டும் அரசு வழங்கிய அடையாள ஆவணம்   

NRI-கள் பதிவு செய்வது எப்படி?

  • அதிகாரப்பூர்வ e-Gate இணையதளமான https://ftittp.mha.gov.in/fti/ -க்குச் செல்லவும்.
  • சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி (Email Address) மற்றும் கேப்ட்சா (Captcha Code) குறியீட்டைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். மொபைல் OTP மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்புக்குப் பிறகு பதிவு முடிவடையும்.
  • கடவுச்சீட்டில் உள்ளதைப் போலவே முழுப் பெயர், பிறந்த தேதி மற்றும் இடம், பெற்றோரின் பெயர்கள், கடவுச்சீட்டு எண், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி ஒரு கணக்கை உருவாக்கவும்.
  • ஒரு தற்காலிக விண்ணப்பக் கோப்பு எண்  உருவாக்கப்படும்.
  •  ஒரு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முகவரி உள்ள கடவுச்சீட்டின் முன் மற்றும் பின் பக்கங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.
  • OCI அட்டை வைத்திருப்பவர்கள் அதன் முதல் மற்றும் கடைசிப் பக்கங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்ற வேண்டும்.
  • பதிவை முடித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் கைரேகை மற்றும் முகத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதை இப்போது, நியமிக்கப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் அல்லது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், அமிர்தசரஸ், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் உள்ள வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலகங்களில் (Foreigners Regional Registration Office – FRRO) செய்யலாம்.
  • கைரேகை பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்களது பதிவு அங்கீகரிக்கப்படும்.
  • அங்கீகரிக்கப்பட்ட தகவல் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
  • இந்தச் சரிபார்ப்பு மற்றும் அங்கீகரிக்கும் செயல்முறை 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம்.
TAGGED: