GCC நாடுகளுக்கு செல்ல தனித்தனி விசா தேவையில்லை; ஒரு விசா போதும்; எப்படி தெரியுமா?

சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகள் இணைந்து ‘Grand Tours Visa’ எனப்படும் ஒருங்கிணைந்த விசாவை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக சவூதியின் சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆறு நாடுகளுக்கு ஒரே விசா:

வளைகுடா நாடுகளில் நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்டு வந்த ஒரே விசா (Unified Visa), அடுத்த ஆண்டு 2026-ல் நடைமுறைக்கு வரவுள்ளது. இது பிராந்தியப் பயணம் மற்றும் சுற்றுலாக் கொள்கையில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்தத் தகவலை சவூதி சுற்றுலாத் துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப் உறுதிப்படுத்தினார். நான்கு ஆண்டுகளாக வளைகுடா நாடுகளின் அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றி, தற்போது இந்தத் திட்டத்தை ஒரு முக்கியமான கட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார்.

மனாமா நகரில் நடந்த வளைகுடா வாயில் முதலீட்டு மன்றத்தில் பேசிய அவர், GCC நாடுகள் இப்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா விரிவாக்கக் காலத்தில் சென்று கொண்டிருக்கின்றன என்றும், இது பிராந்தியத்தை உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக நிலைநிறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 

“எண்ணெய் மற்றும் வர்த்தகத்திற்கு அடுத்தபடியாக, சுற்றுலாவும் ஒரு முக்கியப் பொருளாதாரத் தூணாக உருவாகியுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஒருங்கிணைந்த நுழைவு அனுமதிக்கு அதிகாரப்பூர்வமாக GCC கிராண்ட் டூர்ஸ் விசா (GCC Grand Tours Visa) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஒற்றை விசா மூலம் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், மற்றும் ஓமன் ஆகிய ஆறு நாடுகளுக்கும் பயணிக்க முடியும்.

இது நவம்பர் 2023-ல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இது ஐரோப்பாவில் உள்ள ஷெங்கன் விசா (Schengen-style model) போன்ற ஒரு மாதிரியாகக் கருதப்படுகிறது. இந்த விசா சுற்றுலா மற்றும் குடும்ப சந்திப்புகளுக்கு செல்லுபடியாகும். இதை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பயணிகள் ஆறு நாடுகளில் ஒன்றிற்கு மட்டும் விசா வேண்டுமா அல்லது அனைத்து ஆறு நாடுகளுக்கும் வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த விசாவின் செல்லுபடியாகும் காலம் ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்கள் வரை இருக்கும்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக விசா பெறுவதைவிட, இதன் செலவு குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம், சர்வதேசப் பயணிகளை ஈர்க்கவும், வளைகுடா பிராந்தியத்தின் பொருளாதாரத்தை எண்ணெய் அல்லாத துறைகளில் பல்வகைப்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். 

தேவையான ஆவணங்கள்:

இந்த விசாவைப்பெறுவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், தங்குமிட விவரங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பயணக் காப்பீட்டுச் சான்று, பண ஆதாரத்திற்கான சான்று, திரும்பிச் செல்லும் அல்லது அடுத்த பயணத்திற்கான டிக்கெட் ஆகிய ஆவணங்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்-கதீப், வளைகுடாவின் கலாச்சாரப் பாரம்பரியம், மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த ஒற்றை விசா மூலம் சுற்றுலாத் துறை எண்ணெய் மற்றும் வர்த்தகத்துடன் ஒரு முக்கியப் பொருளாதாரத் தூணாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.