ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உயிரை காப்பாற்ற தனது ஸ்டெம் செல்களைத் தானமாக வழங்கி, நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறியுள்ளார்.
அம்ஜத் ரஹ்மான், என்ற கேரளாவைச் சேர்ந்த இளைஞர் துபாயின் அஜ்மான் என்ற பகுதில் உள்ள ஒரு உணவகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். கொச்சியில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு தன்னுடைய ஸ்டெம் செல்களால் மீண்டும் ஒரு நல்வாழ்வு அளிக்க முடியும் எனத் தெரிந்தவுடன் 5 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அங்கு சென்று உதவியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோரின் ஸ்டெம் செல் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படத்தில் அஜ்மத்-தின் ஸ்டெம் செல்கள் மட்டுமே அந்த சிறுவனுக்குப் பொருந்தும் வகையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது
ஸ்டெம் செல் மாற்றம் என்றால் என்ன?
ஸ்டெம் செல்கள் மாற்றம் என்பது, புற்றுநோய் மற்றும் இரத்தம் தொடர்பான கொடிய நோய்கள் மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ செயல்முறையாகும். இதன் மூலம் தானமாகப் பெறப்பட்ட ஸ்டெம் செல்கள் நோயாளியின் இரத்தத்தில் செலுத்தப்பட்டு, அவை நோயாளியின் எலும்பு மஜ்ஜையில் நுழைந்து புதிய இரத்த செல்களை உருவாக்கத் தொடங்குகின்றன.
11 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு
இந்த ஸ்டெம் செல் தானம் குறித்து அஜ்மத் கூறுகையில்,
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரியில் படிக்கும் போது, அதாவது இந்தச் சிறுவன் பிறப்பதற்கு முன்பே ஸ்டெம் செல் தானமாக வழங்குவதற்குப் பதிவு செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய ஸ்டெம் செல்கள் இந்த 10 வயது சிறுவனுடன் பொருந்தியத்தைக் கேட்டபோது, அஜ்மத்-க்கு அந்த 10 வயது சிறுவன் தன்னுடைய சகோதரன் என்ற எண்ணம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும் அந்தச் சிறுவனின் வயதைத் தவிர, அவனின் பிறந்த இடம், மதம், சமூக நிலை, என எதையும் அஜ்மத் அறியவில்லை. தனக்கு அது அவசியமும் இல்லை என அஜ்மத் தெரிவித்துள்ளார்.
ஸ்டெம் செல் தானத்தால் ரத்தவகை மாறுமா?
நோயாளிக்கும், ஸ்டெம் செல் தானமளிப்பவருக்கும் வேறு வேறு ரத்த வகை இருந்தால், சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் ரத்த வகை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டெம் செல் தானமாக வழங்கியவரின் ரத்தவகைக்கு மாறும். அதாவது அந்தச் சிறுவனின் ரத்த வகை o+. அஜ்மத்தின் ரத்த வகை AB+. இதில் அச்சிறுவனின் ரத்தவகை கொஞ்சம் கொஞ்சமாக AB+ -ஆக மாறும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெம் செல் தானத்தால் உயிருக்கு பாதிப்பா?
ஸ்டெம் செல் தானமளித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என சிலர் நம்பிவருவதாக வேதனை தெரிவித்துள்ள அஜ்மத், இது பற்றிய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் இதைச் செய்வதாகவும், இந்த மருத்துவ முறைக்குப் பிறகு, தான் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் பாராட்டுக்குரிய விஷயம் என்னவென்றால், அஜ்மத்தின் குடும்பத்தினர் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதோடு, துபாயில் அஜ்மத் பணிபுரியும் நிறுவனத் தலைவரும் அஜ்மத்துக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கி வழியனுப்பி வைத்துள்ளார்.
