அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்ற ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு, இந்திய பிரதமர் இந்தியாவின் பாரம்பரிய பொருட்களை பரிசாக வழங்கினார்.
அன்பான வரவேற்பு:
அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் அரசுமுறை பயணமாக ஜன.19 அன்று இந்தியாவிற்கு சென்றார். அமீரக அதிபரை டெல்லி விமான நிலையத்தில் நேரில் சென்று ஆரத்தழுவி இந்திய பிரதமர் மோடி வரவேற்றார்.
விமான நிலையத்தில், அமீரக அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், முப்படை ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டன. இந்த பயணத்தின் போது துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கிய பிரதமர்:
டெல்லி விமான நிலையத்தில் அவரை நேரில் சென்று வரவேற்ற இந்திய பிரதமர் திரு. மோடி, பின்னர் தனது இல்லத்தில் அவருக்குச் சிறப்பான பரிசுகளை வழங்கினார்.
குஜராத் மர ஊஞ்சல்:
குஜராத் மாநிலத்தின் கைவினைத் திறனைப் பறைசாற்றும் வகையில், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட மர ஊஞ்சளை மோடி அவர்கள் பரிசளித்தார். இது குடும்ப ஒற்றுமை மற்றும் தலைமுறைகளை இணைப்பதைக் குறிக்கிறது. 2026-ம் ஆண்டை அமீரகம் ‘குடும்ப ஆண்டு’ என அறிவித்துள்ளதால் இந்தப் பரிசு மிக முக்கியத்துவம் பெறுகிறது.
காஷ்மீர் பாஷ்மினா சால்வை:
மிகவும் மென்மையான காஷ்மீர் பாஷ்மினா சால்வையை வழங்கினார். இது தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரிய வெள்ளிப் பெட்டியில் வைத்து வழங்கப்பட்டது.
அதிபரின் தாயாருக்கான பரிசு:
அதிபரின் தாயார் ஷேக் பாத்திமாவிற்கு காஷ்மீர் பாஷ்மினா சால்வை மற்றும் உலகப்புகழ் பெற்ற காஷ்மீர் குங்குமப்பூ ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
முக்கிய சந்திப்பின் நோக்கம்:
கடந்த 10 ஆண்டுகளில் அமீரக அதிபர் இந்தியா வரும் 5-வது முறை இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் பொருளாதாரம் மற்றும் முதலீடு, விண்வெளி மற்றும் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது:
இரு நாட்டுத் தலைவர்களும் ஊஞ்சலில் அமர்ந்து உரையாடியது, இந்தியா – அமீரகம் இடையிலான நெருக்கமான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
