பனிமூட்டம் நிலவும்; அமீரகத்தில் இந்த வார வானிலை நிலவரம்!


ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வாரம் மேகமூட்டம், மழை மற்றும் பனிமூட்டத்திற்கான வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. 

இன்றைய வானிலை (வியாழன்):

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டம் நிலவும். சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம் வெப்பநிலையும் தற்காலிகமாக உயரும்.

இரவு நேரங்களில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படும். காற்றானது மணிக்கு 10 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அரேபிய வளைகுடா கடற்பகுதி நள்ளிரவில் சீற்றமாக மாற வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை:

வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை கணிசமாகக் குறையும். இரவில் ஈரப்பதம் அதிகரித்து, சனிக்கிழமை அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படக்கூடும்.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் சீற்றமாக இருக்கும்.

சனிக்கிழமை:

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு அதிகாலை வரை உட்புறப் பகுதிகளில் மீண்டும் பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. கடல் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும்.

ஞாயிற்றுக்கிழமை:

வானிலை சீராகும். ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய தெளிவான வானிலை நிலவும். கடல் அலைகள் அடங்கி அமைதியாகக் காணப்படும். இரவு நேரங்களில் ஈரப்பதம் மற்றும் லேசான பனிமூட்டத்திற்கான வாய்ப்பு நீடிக்கும்.

கடந்த வாரம் அமீரகத்தில் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGGED: