அதிவேக பயணத்தின் முதல்படி; ‘துபாய் லூப்’ கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்!

துபாயில் மூன்று முக்கிய இடங்களை அதிகவேகப் பயணத்தின் மூலம் இணைக்கும் துபாய் லூப்போக்குவரத்து சோதனை திட்டத்தின் முதற்கட்ட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA)  அறிவித்துள்ளது.

துபாய் லூப் போக்குவரத்து திட்டம்

மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக துபாயில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2025ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டின் போது துபாய் லூப் போக்குவரத்து திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டில் துபாய் லூப் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று துபாய்  சாலைகள்  மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. 

AED 2.5 பில்லியன் செலவு

2025ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரபல தொழிலதிபரும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனருமான 

எலான் மஸ்க், துபாயில் அமையவுள்ள லூப் போக்குவரத்து திட்டத்தை துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்தார். 

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று துபாய்  சாலைகள்  மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. 

எலான் மஸ்கின் போரிங் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இதன் கட்டுமான பணிகளுக்கு AED 2.5 பில்லியன் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவதும் சுரங்கபாதையில் 24 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடத்தில் 19 நிலையங்களை கொண்டிருக்கும். 

முதல்கட்டமாக AED 600 மில்லியன் செலவில் 6.4 கிலோமீட்டர்களை உள்ளடக்கிய துபாய் சர்வதேச நிதி மையம், துபாய் மால் மற்றும்  புர்ஜ் கலீஃபா ஆகிய மூன்று இடங்களை இணைக்கும் வகையில் நான்கு நிலையங்களுடன் துபாய் லூப் அமையவுள்ளது. 

லாஸ் வேகாஸ் போல் துபாயில் 

லூப்பில் செல்லும் வாகனம் மின்சார லூப் கார் என்று அழைக்கப்படுகிறது. இது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு நாளைக்கு 13,000 பயணிகள் வரை இந்த லூப் வழித்தடத்தில் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. 

அதன்படி போரிங் நிறுவனம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அமைத்துள்ள லூப் போல் துபாயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து 2025ஆம் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பேசிய துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், ”இந்த திட்டம் புதிய, அதிநவீன போக்குவரத்து தீர்வுகளை முன்னேற்றுவதற்கான துபாயின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்றார். 

இதுகுறித்து எலான் மஸ்க் கூறியதாவது, ” மணல் புயல் உள்ளிட்ட கடுமையான வானிலையால் சுரங்கப்பாதைகள் பாதிக்கப்படுவதில்லை, நிலத்தடி பயணத்தில் சிக்கல்கள் எதுவும் இருக்காது என்று தெரிவித்தார். 

TAGGED: