துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களுக்கு, பல தசாப்தங்களாக அவர் கலாச்சாரம் மற்றும் அறிவியல் துறைக்கு ஆற்றிய மிகச் சிறந்த பங்களிப்புகளுக்காக, சுல்தான் பின் அலி அல் ஓவைஸ் கலாச்சார விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுல்தான் பின் அலி அல் ஓவைஸ் கலாச்சார விருது:
சுல்தான் பின் அலி அல் ஓவைஸ் கலாச்சார விருது குழு வெளியிட்ட அறிக்கையில், “இந்த விருது பட்டங்களை விட சிந்தனையையும், பெயர்களை விட பயணங்களையும் கௌரவிக்கிறது.
அதனால் தாராள மனப்பான்மையை வாழ்க்கை முறையாகவும், வளர்ச்சியை ஒரு பணியாகவும், எதிர்காலத்தை ஒரு உன்னத இலக்காகவும் மாற்றிய துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு இந்த விருதை வழங்க தீர்மானிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது, மனிதநேயம், அறிவு, கலாச்சாரம், பொருளாதாரம், அமைதி ஆகியவற்றை இணைக்கும் ஒரு புதிய மறுமலர்ச்சி மாதிரியைக் காட்டுகிறது. அவரது பார்வையில், கலாச்சாரம், அறிவியல், கண்டுபிடிப்புகள் ஆகியவை நிலையான வளர்ச்சிக்கு முக்கியம். அவர் மதம், இனம் பார்க்காமல் மக்களுக்கு உதவும் ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்கினார்.
முக்கிய முன்னெடுப்புகள்:
அவர் தொடங்கிய சில முக்கியமான திட்டங்களை விருதுக்குழு எடுத்துரைத்துள்ளது.
அரபு வாசிப்புப் போட்டி (Arab Reading Challenge): 2015 இல் தொடங்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அரபு மொழி வாசிப்புப் போட்டி. வாசிப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பது இதன் நோக்கம். இது 163 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை ஈர்த்துள்ளது.
தி கிரேட் அரபு மைண்ட்ஸ் விருது (The Great Arab Minds Award): 2022 இல் தொடங்கப்பட்டது. அறிவியல், கலாச்சாரம் மற்றும் கண்டுபிடிப்புகளில் அரபுப் பிராந்தியத்திற்கு பங்களிக்கும் விதிவிலக்கான அரபு திறமைகளைக் கண்டறிந்து, கௌரவிக்க இது உதவுகிறது.
முகமது பின் ரஷித் நூலகம்: ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சார உத்தியை ஆதரிக்கும் ஒரு முக்கியமான மைல்கல்.
டிஜிட்டல் பள்ளி (Digital School): 2020 இல் தொடங்கப்பட்ட முதல் ஒருங்கிணைந்த டிஜிட்டல் பள்ளி. இது போதிய வசதியற்ற பிராந்தியங்களில் உள்ள மாணவர்களுக்கு தரமான கற்றல் அனுபவத்தை வழங்குகிறது.
முகமது பின் ரஷித் அரபு மொழி விருது: அரபு மொழியின் உலகளாவிய நிலையை மேம்படுத்துகிறது மற்றும் அதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இணைக்கிறது.
அவரது இலக்கிய மற்றும் கவிதைப் பங்களிப்புகளான My Vision, My Story, Life Taught Me, மற்றும் Forty Poems from the Desert போன்ற படைப்புகளும் தேசிய மற்றும் அரபு நூலகங்களை செழுமைப்படுத்தியதாகக் குழு பாராட்டியுள்ளது.
