உலகின் முதல் தங்கத்தாலான தெருவுடன் துபாயில் பிரமாண்டமாக அமையும் தங்க வளாகம்!

தேராவில் ஒரே இடத்தில் 1,000 நகைக் கடைகள் உள்ள வகையில் பிரமாண்ட தங்க வளாகம் அமையவுள்ளது. 

தங்க வளாகம் கட்ட திட்டம்:

குறைந்த விலையில் தங்கம் விற்பனையாகும் நாடுகளில் அமீரகமும் ஒன்றாக உள்ளது. இதனால் துபாய், தேராவில் உள்ள கோல்ட் சூக் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட தங்க மற்றும் வைர நகை கடைகளில் தினமும் வெளிநாட்டினர் பலர் தங்க நகைகளை வாங்கி செல்கின்றனர்.

தங்க நகை தொடர்பான வியாபாரம் அதிகம் நடைபெறும் நகரங்களில் ஒன்றாக துபாய் விளங்குவதால் பல நகை வியாபாரிகள் துபாயில் தங்கள் வணிக நிறுவனத்தை நிறுவி வருகின்றனர். இந்நிலையில் தேராவில் ஒரே இடத்தில் 1,000 நகைக் கடைகள் உள்ள வகையில் Gold District என்ற பிரமாண்ட தங்க வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

தங்க வளாகம் மற்றும் தங்கத்தாலான தெரு 

துபாயை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான Ithra Dubai, தேராவில் ஒரே இடத்தில் 1,000 நகைக் கடைகள் அமையும் வகையில் Gold District என்ற  பிரமாண்ட தங்க வளாகத்தை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதில் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மொத்த வர்த்தகம் மற்றும் முதலீடு நிறுவனங்கள் ஆகியவை அமையவுள்ளன. அதுமட்டுமின்றி வாசனை திரவியம் மற்றும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் இந்த வளாகத்தில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்கத்திலான தெருவை அமைக்க உள்ளதாகவும் Ithra Dubai அறிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல நகைக்கடை நிறுவனமான ஜோயாலுகாஸ், 24,000 சதுர அடி பரப்பளவில் தங்க வளாகத்தில் கடையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது மத்திய கிழக்கில் அதன் மிகப்பெரிய கடையாக இருக்கும் என்று ஜோயாலுகாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (DET) கீழ் செயல்படும் துபாய் விழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனத்தின் (DFRE) தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் காஜா கூறியதாவது,  “தங்கம் துபாயின் கலாச்சார மற்றும் வணிகக் கட்டமைப்பில் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

இது நமது பாரம்பரியம், செழிப்பு மற்றும் நீடித்த உணர்வைக் குறிக்கிறது. இந்த இடத்தின் மூலம், நாங்கள் அந்த மரபைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், படைப்பாற்றல் மற்றும் நிலைத்தன்மையால் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய சகாப்தத்திற்காக அதை மறுபரிசீலனை செய்கிறோம்” என்று தெரிவித்தார்.