UAE-வில் பணியாற்ற விரும்புகிறீர்களா? முக்கியமான Work Permits பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

தொழிலாளர் உறவுகள் சட்டம் மற்றும் அதன் நிர்வாக விதிமுறைகள், தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்  பல்வேறு வகையான பணி அனுமதிகளை வழங்கியுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதை அல்லது ஏற்கனவே நாட்டிற்குள் இருப்பவர்களுடன் ஒப்பந்தம் செய்வதை எளிதாக்குகிறது. ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள 13 வகையான வேலை அனுமதிகள்  குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

உள்ளடக்கம்
1. வெளிநாட்டவரை நியமித்தல் (Recruiting a worker from outside the State):2.  பணி மாற்று அனுமதி (Transfer work permit):3. உறவினர் விசா அனுமதி (Work Permit under Relative’s Visa):4. தற்காலிக வேலை அனுமதி (Temporary Work Permit):5. ஒரு பணி அனுமதி (One-mission permit):6. பகுதி நேர வேலை அனுமதி (Part-Time Work Permit)7. இளம் பருவத்தவருக்கான வேலை அனுமதி! 8. மாணவர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அனுமதி (Student training and employment permit): 9. UAE மற்றும் GCC நாட்டினர் வேலை அனுமதி: (UAE and GCC national permit): 10. கோல்டன் விசா வேலை அனுமதி (Golden visa work permit):MOHRE இந்த அனுமதி மூன்று சூழ்நிலைகளில்  வழங்கப்படுவதை தெளிவுபடுத்தியுள்ளது:11. தேசிய பயிற்சி அனுமதி (National Trainee Permit):12. ஃப்ரீலான்ஸ் வேலை அனுமதி (Freelance Permit)13. தனியார் ஆசிரியர் வேலை அனுமதி (Private Teacher work permit)அனுமதி பெறத் தகுதியுள்ளவர்கள்:தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்ப செயல்முறை:

1. வெளிநாட்டவரை நியமித்தல் (Recruiting a worker from outside the State):

வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை நியமிக்க இது பயன்படுகிறது. இதில் விசா, மருத்துவ சோதனை, லேபர் கார்ட், எமிரேட்ஸ் ஐடி வழங்குதல் ஆகியவை நிறுவனத்தின் பொறுப்பாகும். அனுமதி இல்லாமல் பணியமர்த்தினால், நிறுவனத்திற்கு  AED 50,000 முதல் 200,000 வரை அபராதம் விதிக்கப்படும். 

2.  பணி மாற்று அனுமதி (Transfer work permit):

இந்த அனுமதி, MOHRE-ல் பதிவு செய்யப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு இடையே பணியாளர்களை மாற்றுவதற்கு வழிவகுக்கிறது. UAE-ல் ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு நீங்கள் மாறும்போது இந்த அனுமதி தேவைப்படுகிறது.

3. உறவினர் விசா அனுமதி (Work Permit under Relative’s Visa):

குடும்ப உறுப்பினரால் ஸ்பான்சர் செய்யப்பட்ட குடியிருப்பு விசா (Residence Visa) உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன் மூலம், குடும்ப விசாவில் வாழும் நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டபூர்வமாக வேலை செய்ய முடியும். எடுத்துக்காட்டாக, பணியாளரின் வீசா கணவர்/மனைவி, பெற்றோர், அல்லது மகன்/ மகள் ஸ்பான்சர் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

4. தற்காலிக வேலை அனுமதி (Temporary Work Permit):

இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில், வசிக்கும் ஒரு பணியாளர்  தற்காலிக (அதிகபட்சம் 6 மாதங்கள்) வரை வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அமீரகத்தில் உள்ள நிறுவனம், தற்காலிக வேலைகளுக்காக பணியாளர்களை சட்டப்படி பணியமர்த்த முடியும்.

5. ஒரு பணி அனுமதி (One-mission permit):

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக பணி அல்லது குறிப்பிட்ட திட்டத்தை முடிக்க வெளிநாட்டிலிருந்து ஒரு ஊழியரை நியமிக்க விரும்பும் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படும் அனுமதி என மனித வளம் மற்றும் அமீரக மேம்பாட்டு அமைச்சகம் (MOHRE) கூறுகிறது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்  வெளிநாட்டிலிருந்து ஒரு ஊழியரை பணியமர்த்த முடியும்.

6. பகுதி நேர வேலை அனுமதி (Part-Time Work Permit)

இந்த அனுமதியின் கீழ், ஒரு பணியாளர் பகுதி நேர தொழிலாளர் ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற முடியும். இதன் மூலம், நிறுவனத்தின் ஒப்புதல் தேவையின்றி, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றலாம். இதற்கான நிபந்தனை, வாரத்திற்கு குறைந்தது 20 மணி நேரம் பணி நேரம் இருக்க வேண்டும் என்பதாகும்.

7. இளம் பருவத்தவருக்கான வேலை அனுமதி! 

15 முதல் 18 வயது வரை உள்ளவர்களை பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் பணியமர்த்துவதற்கு அனுமதிக்கிறது. தனியார் துறை நிறுவனத்தில் பணியமர்த்த விரும்பும் இளம் பருவத்தவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவைப்படும்.  ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின் படி (Federal Decree-Law No. 33 of 2021), இளம் பருவத்தவர்களை பணியமர்த்த நிறுவனங்கள் பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அவற்றுள் சில, 18 வயதுக்கு மேற்பட்ட  பணியாளரை விட குறைந்த பணி நேரம் (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 6 மணி நேரம்) வேலை கொடுக்க வேண்டும். 

இளம் பருவத்தவர்களை அபாயகரமான அல்லது கடினமான பணிகளில் பணியமர்த்தக் கூடாது.

8. மாணவர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அனுமதி (Student training and employment permit): 

15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெறலாம்.  அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான u.ae-இன் படி, இந்த அனுமதி குறிப்பாக தனியார் துறையில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்காக இந்த பணி அனுமதி  வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி அனுமதி மூன்று மாதங்கள் வரை இருக்கும். இளம் பருவத்தவர் (15-18 வயது) பணியமர்த்தலுக்கு அல்லது பயிற்சிக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கட்டாயமாகும். இந்த அனுமதி மூலம் இளம் பருவத்தவர்களை அபாயகரமான பணிகள், இரவு நேர வேலைகள், அல்லது  கடினமான பணிகளில் ஈடுபடுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

9. UAE மற்றும் GCC நாட்டினர் வேலை அனுமதி: (UAE and GCC national permit): 

இந்த அனுமதி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு கூட்டுறவு கவுன்சில் (GCC) நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா-வை சேர்ந்த குடிமக்களை பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது.

10. கோல்டன் விசா வேலை அனுமதி (Golden visa work permit):

கோல்டன் விசா வைத்திருந்தாலும், அமீராக நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டால் வேலை அனுமதி சான்றிதழ் தேவைப்படும். 1 ஜூலை 2021-ல், மனிதவளம் மற்றும் எமிரேட் மேம்பாட்டு அமைச்சகம் (MOHRE) கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கான சிறப்பு வேலை அனுமதிகள் வழங்கத் தொடங்கியதாக அறிவித்தது.

MOHRE இந்த அனுமதி மூன்று சூழ்நிலைகளில்  வழங்கப்படுவதை தெளிவுபடுத்தியுள்ளது:

1. கோல்டன் விசா பெற்றபோது பணியில் இல்லாதவர்கள், பின்னர் நிறுவனத்தில் பணிபுரிய  விரும்பினால்,

2. தற்போதைய நிறுவனத்தின் வேலை அனுமதி காலாவதியான பிறகு, கோல்டன் விசா வைத்திருப்பவரின் வேலை அனுமதி மற்றும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பினால், 

3. கோல்டன் விசா வைத்திருப்பவர் வேறொரு நிறுவனத்தில் சேர விரும்பினால் கோல்டன் விசா வேலை அனுமதி வழங்கப்படுகிறது. 

11. தேசிய பயிற்சி அனுமதி (National Trainee Permit):

MOHRE-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களால் இந்த அனுமதியைப் பெற முடியும். இது அமீரக குடியிருப்பாளர்களின் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்க விரும்பும் நிறுவனங்களுக்கானது.

12. ஃப்ரீலான்ஸ் வேலை அனுமதி (Freelance Permit)

ஒரு தனிநபராக சுயாதீனமாக பணியாற்ற விரும்புபவர்களுக்கு இந்த அனுமது வழங்கப்படுகிறது.  இந்த அனுமதிக்கு வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் ஆகியோருக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் உள்ளது.

13. தனியார் ஆசிரியர் வேலை அனுமதி (Private Teacher work permit)

இந்த அனுமதி, தகுதிவாய்ந்த நிபுணர்கள் தனிப்பட்ட பாடப்பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதிக்கிறது. இதற்கான விண்ணப்பத்தை மனிதவளம் மற்றும் எமிரேட் மேம்பாட்டு அமைச்சகம் (MOHRE)-இன் வலைத்தளம் மூலம் இலவசமாக செய்யலாம்.

அனுமதி பெறத் தகுதியுள்ளவர்கள்:

  • அரசு அல்லது தனியார் பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள்.
  • அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள்.
  • வேலையில்லாத நபர்கள்.
  • 15 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள்.
  • பல்கலைக்கழக மாணவர்கள்.

தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்ப செயல்முறை:

MOHRE-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி, கல்வி பட்டங்கள், ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்கள் உள்ளிடவற்றை சமர்பிக்க வேண்டும்.