கடந்த சில தினங்களாக இணைய தடைகள், இணைய வேக குறைவு போன்ற பிரச்சனைகளால் அமீரக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம், செங்கடலின் அடியில் அமைந்துள்ள இணைய கேபிள்கள் சேதமடைந்தது. இதனை சரி செய்ய சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இணைய சேவை பாதிப்பு:
செங்கடலில் உள்ள கேபிள்கள் சேதமானதால் சில தினங்களாக வளைகுடா நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் இணைய சேவை சீரானதும் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும், தங்களது தொழில்நுட்பக் குழுக்கள் இணையப் பிரச்சினையைத் தீர்க்கப் பணியாற்றி வருவதாகவும் e& நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழுது நீக்கம் செய்யப்படுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, இணைய கண்காணிப்பு தளமான டவுன்டிடெக்டர்.ஏஇ அமீரகத்தின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான டூ மற்றும் எதிசலாத் ஆகியவைகளின் மெதுவான இணைய சேவை குறித்த அறிக்கைகளை காட்டியுள்ளது.
பழுது செய்வது எப்படி?
செங்கடல் இணைய கேபிள் துண்டிப்புகளை அமெரிக்க வெளியுறவுத்துறை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. இதில் அந்த கேபிள்களை விரைவாக சரி செய்ய முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு கப்பல்கள் சேதமடைந்த கேபிள்கள் உள்ள பகுதியை கண்டறிய அனுப்பப்படும். பிறகு கடலின் ஆழத்தில் இருந்து அந்த கேபிள்கள் கடல் மட்டத்திற்கு தூக்கி வரப்பட்டு பிறகு பழுது நீக்கம் செய்யப்பட வேண்டும்.
பழுதுபார்க்க ஆகும் காலம்:
இந்த செயல்முறையானது இடம், வானிலை, கப்பல்கள் கிடைக்கும் தன்மையை பொறுத்து 2 முதல் 6 வாரங்கள் வரை ஆகும். எனவே தற்போது ஏற்பட்டுள்ள கேபிள் துண்டிப்பு காரணமாக அமீரகத்தில் 6 வாரங்களுக்கு இணைய சேவை பாதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் மற்றும் இந்தியா வழியாக மாற்று இணைய இணைப்புகள் இருந்தாலும், இந்தச் சேவையை நம்பியிருக்கும் பல நாடுகளுக்கு இது போதுமானதாக இருக்காது. செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் இணைய இணைப்பு, கடல் இணைய கேபிள்கள் ஒரு மாற்று வழியாக இருக்கலாம்.
ஆனால், அதிக வேகம், தரவு பரிமாற்றம் ஆகியவற்றிற்கு இன்னும் கடலுக்கு அடியில் இருக்கும் இணைப்புகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிகழ்வு கடந்த 2008-ம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அலெக்ஸாண்டிரியாவில் ஏற்பட்ட கேபிள் துண்டிப்பு சம்பவம் கிட்டத்தட்ட ஒரு மாதம் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் லட்சக்கணக்கான மக்களை பாதித்தது.
