புதிய தூதரக அதிகாரி நியமனம் முதல் இந்தியர் உயிரிழப்பு வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

புதிய தூதரக அதிகாரி நியமனம் 

துபாய்க்கான புதிய இந்திய துணைத் தூதராக டாக்டர் எம்மாடி விஷ்ணு வர்தன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அமீரக வெளியுறவு அமைச்சகத்திடம் தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்தவுடன், அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாய்க்கான இந்திய துணைத் தூதராக பணியாற்றிய சதீஷ் குமார் சிவனின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரி டாக்டர் எம்மாடி விஷ்ணு வர்தன் ரெட்டி புதிய இந்திய துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

எம்மாடி விஷ்ணு வர்தன், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றியுள்ளார். அமீரக வெளியுறவு அமைச்சகத்திடம் தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பிறகு, அவர் விரைவில் தனது பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூட்டிய காருக்குள் இருந்து GPS மூலம் பெண் மீட்பு 

அதிகாலை 3:30 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, GPS தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூட்டிய காருக்குள் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை துபாய் காவல்துறையினர் உடனடியாக மீட்டனர்.

துபாயில், அதிகாலை 3:30 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த பெண் ஒருவர், அரபியில் “சகோதரே, நான் அந்தச் சந்திப்பில் இருக்கிறேன்…” எனத் தளர்ந்த குரலில் கூறிவிட்டு மயங்கினார்.

அவர் கைபேசி அழைப்பை துண்டிக்காததால், ஜிபிஎஸ் (GPS) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ரோந்துப் படையினர் பூட்டிய காருக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரெனக் கடுமையாகக் குறைந்ததால் அந்தப் பெண் மயக்கமடைந்தது தெரியவந்தது. சரியான நேரத்தில் வந்த காவல்துறையினருக்கு அப்பெண் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் இந்தியர் என உறுதி

துபாயில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஷிஜின் பால் (27) என இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

துபாயில் ஷேக் சயீத் சாலையில் உள்ள ஒரு கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்ததாக துபாய் சிவில் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஷிஜின் பால் என துபாயில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. இவர் அந்த கார் ஷோரூமில் சோஷியல் மீடியா மேலாளராக கடந்த 8 மாதங்களாகப் பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஷிஜின் பாலின் குடும்பத்தினருக்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து, அவரது உடலை தாயகத்திற்குக் கொண்டு செல்ல தேவையான உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

விளக்கொளியில் மின்னவிருக்கும் துபாய் க்ரீக்

துபாய் இளவரசரின் வழிகாட்டுதலின் கீழ், AED 80 மில்லியன் செலவில் துபாய் க்ரீக்கின் 8 கி.மீ நீளப் பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட விளக்குகளை அமைத்து, உலகத் தரத்திலான இரவுநேர சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், துபாய் நகராட்சி, AED 80 மில்லியன் செலவில் ‘Dubai Creek Lights’ திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், 8 கி.மீ. நீளமுள்ள Dubai Creek பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட விளக்குகள் அமைக்கப்பட்டு, உலகத் தரத்தில் இரவு நேர சுற்றுலா அனுபவம் உருவாக்கப்பட உள்ளது. 

இத்திட்டம் 2027-ன் முதல் காலாண்டில் நிறைவடையும்.

இந்த விளக்குகள் Creek Quay, Gold Souq, Infinity Bridge, Al Shindagha, Bur Dubai Souq, Al Seef Marina உள்ளிட்ட 6 முக்கிய பகுதிகளில் அமைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், 2027 முதல் காலாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயில் முதல் இந்திய திரைப்பட விழா!

அடுத்தாண்டு பிப். 5 முதல்  7 வரை ‘இந்தியத் திரைப்படத் திருவிழா துபாய்’ (IFFD) என்ற வருடாந்திர நிகழ்வை முதன்முறையாக  துபாயில் நடத்தவுள்ளதாக Moviedom நிறுவனம்  அறிவித்துள்ளது.

துபாயை தலைமையிடமாகக் கொண்ட Moviedom நிறுவனம், 2027 பிப்ரவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் Indian Film Festival Dubai (IFFD)-ஐ முதல் முறையாக நடத்துகிறது. இந்த 3 நாள் விழாவில் திரைப்பட திரையிடல், விருதுகள், இசை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.  

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வழக்கமான பணப் பரிவர்த்தனைகள் மட்டுமின்றி, மூவிடோம் நிறுவனத்தின் சொந்த கிரிப்டோகரன்சியான $MDOM மூலமாகவும் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

TAGGED: