புர்ஜ் கலீபாவில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!
புத்தாண்டை முன்னிட்டு டிச. 31 முதல் 8 நாட்களுக்கு புர்ஜ் கலீபாவில் வாணவேடிக்கை மற்றும் லேசர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுகிறது.
எமார் சார்பில் துபாயில் பல்வேறு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிச. 31 முதல் ஜன. 7 வரை புர்ஜ் கலீபாவில் வாணவேடிக்கை மற்றும் லேசர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை இலவசமாக காண டவுன்டவுன் பகுதிக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். புர்ஜ் பார்க் (Burj Park) பகுதியில் இருந்து புத்தாண்டு நிகழ்ச்சிகளை முன்வரிசையில் பார்க்க டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. பெரியவர்களுக்கு AED 997.5, 5–12 வயது குழந்தைகளுக்கு AED 577.5, 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசம்.
தொலைந்த பொருளை ஒப்படைத்தால் வெகுமதி
துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், துபாயில் தொலைந்த மற்றும் கைவிடப்பட்ட பொருட்களை கையாளும் புதிய சட்டத்தை சட்டம் எண் (17) 2025 வெளியிட்டுள்ளார். இந்தச் சட்டம் நவம்பர் 25, 2025 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம், தொலைந்த பொருட்களைப் பற்றித் தெரிவிக்கும் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும், எளிமையாகவும், நேர்மையை ஊக்குவிப்பதாகவும் மாற்றியமைக்கிறது. தொலைந்த அல்லது கைவிடப்பட்ட பொருட்களைக் கண்டுபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பவர்களுக்கு அதிகபட்சமாக AED 50,000 வரை வழங்கப்படும்.
இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு AED 500 முதல் AED 100,000 வரை அபராதம் விதிக்கப்படும். ஒரு வருடத்திற்குள் மீண்டும் தவறு செய்தால், அபராதம் AED 200,000 வரை இரட்டிப்பாகும்.
அபுதாபியில் பயன்பாட்டுக்கு வந்த ரோபோ டாக்சி சேவை!
அபுதாபியில் உள்ள யாஷ் தீவில் Uber-ன் ஓட்டுநரில்லா ரோபோ டாக்சிகள் பயன்பாட்டுக்கு வந்தது. ரோபோ டாக்சியை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் பயன்படுத்தலாம்.
அமெரிக்காவிற்கு வெளியே Uber தளத்தில் முழுமையாக ஓட்டுநர் இல்லாத டாக்சி சேவையை வழங்கும் முதல் நகரமாக அபுதாபி மாறியுள்ளது. WeRide மற்றும் Uber நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் முதற்கட்டமாக 100க்கும் மேற்பட்ட ரோபோ டாக்சிகள் யாஷ் தீவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
அபுதாபியில் உள்ள யாஸ் தீவு (Yas Island), சாதியட் தீவு (Saadiyat Island), அல் மரியா தீவு (Al Maryah Island), அல் ரீம் தீவு (Al Reem Island) போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் ரோபோடாக்சி சேவை கிடைக்கிறது. பயணிகள் ஊபர் செயலி மூலமாகப் பதிவு செய்து, “Autonomous” என்ற புதிய விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
துபாய் டியூட்டி ஃப்ரீயில் AED 1M வென்ற தமிழர்!
சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் 50 வயதான செல்வராஜ் விஜயானந்த் என்பவர் ஆன்லைனில் வாங்கிய துபாய் டியூட்டி ஃப்ரீ டிரா டிக்கெட்டில் சென்னையை சேர்ந்த செல்வராஜ் என்ற பொறியாளர் 1 மில்லியன் டாலர்களை (ரூ. 8.9 கோடி) வென்றுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக துபாய் டியூட்டி ஃப்ரீ டிரா டிக்கெட்டை வாங்கி வரும் செல்வராஜுக்கு இம்முறை 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. என்னுடைய நீண்ட நாள் கனவு நிஜமாகியுள்ளது என்று செல்வராஜ் கூறினார்.
தேசிய தினத்தை முன்னிட்டு பார்க்கிங், அருங்காட்சியங்களுக்கு இலவசம்!
அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு, துபாயில் நவ. 30, டிச. 1, டிச. 2ஆம் தேதிகளில் அனைத்து பொது பார்க்கிங்களை இலவசமாக பயன்படுத்தலாம். அதேசமயம், நவ.29 முதல் செவ்வாய்க்கிழமை வரை துபாய் மெட்ரோ ரயில் சேவை நேரத்தையும் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நீட்டித்துள்ளது.
மேலும் பொது வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்த இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மல்டி லெவல் கார் பார்க்கிங் மற்றும் அல் கைல் கேட் N-365 ஆகிய இடங்களில் இலவச பார்க்கிங் கிடையாது
மேலும் டிச. 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஷார்ஜா அருங்காட்சியக ஆணையத்தின் கீழ் உள்ள 16 அருங்காட்சியகங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.
அதன் படி ஷார்ஜா, கல்பா மற்றும் கோர்பக்கானில் உள்ள 16 அருங்காட்சியகங்களையும் பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்று ஷார்ஜா அருங்காட்சியக ஆணையம் அறிவித்துள்ளது.
