🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்கும் AI கண்கள்; மீறினால் AED 500 அபராதம் பாயும்!

பொது இடங்களில் குப்பை போடுபவர்களை கண்காணிக்க சாலையில் AI (செயற்கை நுண்ணறிவு) கேமராக்களை பொருந்தியுள்ளது துபாய் மாநகராட்சி.  

அமீரகத்தில் அதிக மக்கள் வசிக்கும் நகரமாக துபாய் இருப்பதாலும், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாலும் இங்கு தூய்மை பணிகள் அன்றாடம் நடைபெற்று வருகிறது. சாலையில் கிடைக்கும் குப்பைகளை அள்ளுவது மட்டுமின்றி பொது இடங்களில் குப்பை போடுவதை தடுக்கவும் துபாய் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதில் ஒரு பகுதியாக பொது இடங்களில் குப்பை போடுபவர்களை கண்காணிக்க AI கேமராக்களை சாலையில் பொருத்தியுள்ளதாக துபாய் மாநகராட்சி அறிவித்துள்ளது. 

AI கேமராவில் கண்காணிப்பு

அமீரகத்தின் “ஸ்மார்ட் கழிவு மேலாண்மை” கட்டமைப்பை பின்பற்றி துபாய் மாநகராட்சி AI கேமராக்களை பொருந்தியுள்ளது. அதன்படி சாலையில் யாரேனும் குப்பை கொட்டினால், AI கேமராக்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும். அதனை தொடர்ந்து குப்பை அள்ளும் வாகனம் வந்து வீசப்பட்ட குப்பையை அள்ளிச் செல்லும். இதில் யார் அந்த குப்பையை  வீசினாரோ அவருக்கு AED 500 வரை அபராதம் விதிக்கப்படும். 

இது மட்டுமின்றி சோதனை முயற்சியாக குப்பை அள்ளும் வாகனங்களிலும்  AI கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் தூய்மை பணியாளர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்று மாநகராட்சி கண்காணிக்கும். 

துபாய் மாநகராட்சியின் இயக்குநர் ஜெனரல் மர்வான் அகமது பின் காலிதா கூறியதாவது, புதிய AI கேமரா கண்காணிப்பு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துதல், தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஆதரித்தல் மற்றும் நகர்ப்புற சூழலை மேம்படுத்த நிலையான கொள்கைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாய அணுகுமுறையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார். 

புகாரளிக்க எல்டிசாம் செயலி:

உலகின் தூய்மையான நகரமாக தனது அந்தஸ்தை வலுப்படுத்தும் முயற்சியாக, துபாய் மாநகராட்சி கடந்த ஆண்டு எல்டிசாம் (Eltizam) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியது. இதில் பொது இடங்களில் குப்பை கொட்டுதல், எச்சில் துப்புதல், பார்பிக்யூ செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை செய்யும் நபர்கள் குறித்து புகைப்பட ஆதாரங்கள் மற்றும் இருப்பிட விவரங்களை பதிவிட்டு புகார் தெரிவிக்கலாம்.