குடியரசு தின விழா கொண்டாட்டம்!
ஜன.26, 2026 அன்று 77வது குடியரசு தின விழா இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அது போல் இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான அமீரகத்தில் துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் 77வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தியத் துணைத் தூதர் திரு. சதிஷ் குமார் சிவன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். இதை தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இந்த விழாவுக்கு மேலும் புத்துயிர் ஊட்டின.
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்தியத் துணைத் தூதர் திரு. சதிஷ் குமார் சிவன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஜன.26, 2026 அமீரகத்தில் வேலை நாளாக இருந்தபோதிலும், இந்த விழாவில் துபாயில் உள்ள இந்திய மக்கள் திரளானோர் கலந்துகொண்டு தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.
தாக்குதலுக்கு அமீரகம் ஆதரவளிக்காது
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மீதான எந்தவொரு இராணுவத் தாக்குதலுக்கும் தனது வான்வெளி, நிலப்பரப்பு அல்லது கடல் எல்லைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஈரான் மீதான தாக்குதலுக்கு தங்களது வான்வெளி, கடல் பகுதி மற்றும் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என அமெரிக்காவுக்கு அமீரகம் சூசகமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு ஈரான் மீதான சவூதியின் வான்வெளி தாக்குதலுக்கும் தங்களது வான்பரப்பை பயன்படுத்த அமீரகம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிப்பது, நாடுகளின் இறையாண்மையை மதிப்பது மற்றும் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தைக் குறைப்பதே தற்போதைய நெருக்கடிக்குச் சிறந்த தீர்வு என்று அமீரகம் வலியுறுத்தியுள்ளது. கடந்த வாரம் சவூதி அரேபியாவும் இதேபோன்ற ஒரு முடிவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
துபாயில் தங்கத்திலான தெரு!
துபாய் தேராவில் ஒரே இடத்தில் 1,000 நகைக் கடைகள் உள்ள வகையில் பிரமாண்ட Gold District மற்றும் தங்கத்திலான தெரு அமையவுள்ளது. துபாயை உலகின் நகை வர்த்தகத்தின் மையமாக மாற்றும் வகையில் தேரா பகுதியில் ஒரே இடத்தில் 1,000 நகைக் கடைகள் உள்ள வகையில் பிரமாண்ட Gold District மற்றும் தங்கத்திலான தெரு அமைக்கப்படும் என்று தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Aptamil Advance 1 POF பால் பவுடரை குழந்தைகளுக்கு தர வேண்டாம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் எமிரேட்ஸ் மருந்து ஆணையம் ஆகியவை Aptamil Advance 1 POF என்ற குழந்தை பால் பவுடர் தொகுப்பை (Batch) சந்தையிலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளன.
நுட்ரிசியா மிடில் ஈஸ்ட் (டானோன் – Danone) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தயாரிப்பு, தற்போது அமீரகத்தின் முக்கிய விற்பனை நிலையங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பதன் காரணமாக 6 மாத வரையிலான குழந்தைகள் உட்கொள்ளும் Aptamil Advance 1 POF பால் பவுடரை குழந்தைகளுக்கு தர வேண்டாம் என அமீரக அரசு எச்சரித்துள்ளது.
ஆறு மாத வரையிலான குழந்தைகள் உட்கொள்ளும் 2026, நவ. 8 வரை காலாவதி தேதி உள்ள Nutricia Middle East (Danone) தயாரித்த Aptamil Advance 1 POF பால் பவுடரில் Bacillus Cereus என்ற பாக்டீரியா இருப்பதன் காரணமாக அவற்றை குழந்தைகளுக்கு தர வேண்டாம் என அமீரக சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
குவைத் மற்றும் ஓமன் நாடுகளும் இந்த பால் பவுடருக்கு தடை விதித்துள்ளன.
டெலிவரி ஊழியர்களுக்கு விருது
துபாயில் டெலிவரி நிறுவனங்கள் மற்றும் டிரைவர்களுக்கான புதிய விருதுகளை சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. சிறந்த டெலிவரி ஊழியர், சிறந்த டெலிவரி நிறுவனம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
டெலிவரி நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) Delivery Sector Excellence Award என்ற புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது.
இதில் சிறந்த டெலிவரி ஊழியர், சிறந்த டெலிவரி நிறுவனம், சிறந்த பார்ட்னர், சிறந்த டெலிவரி நிறுவனம் (via Smart Platforms and Apps) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பாகப் பணிபுரியும் நிறுவனங்களையும், விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றும் டிரைவர்களையும் கௌரவிப்பதே இந்த விருதின் நோக்கமாகும்.
