ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன. துபாயில் உள்ள இந்திய தூதரகம், இந்திய வெளியுறவுத்துறை சமீபத்தில் அறிவித்த புதிய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இது திருமணச் சான்றிதழ் இல்லாத இந்திய குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் தங்கள் மனைவியின் பெயரைச் சேர்க்க அனுமதிக்கிறது.
இதன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையின் பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்க, Annexure J அதாவது பாஸ்போர்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்கும்போது திருமணச் சான்றாகப் பயன்படுத்தக்கூடிய கூட்டு அறிவிப்புப் படிவத்தை சமர்ப்பிக்க முடியும்.
Annexure J என்றால் என்ன?
Annexure J என்பது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் திருமண நிலையை உறுதி செய்யும் இணைந்த அறிக்கை ஆகும். இதில் கணவன் மற்றும் மனைவி தங்கள் பெயர்களை குறிப்பிடுவதோடு, திருமணமான தம்பதிகளாக இணைந்து வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த ஆவணத்தில் பின்வரும் தகவல்கள் அவசியமாக இருக்க வேண்டும்:
- இருவரின் சமீபத்திய இணைந்த புகைப்படம் (சுய கையொப்பமிட்டது)
- முழுப்பெயர் மற்றும் முகவரி விவரங்கள்
- ஆதார் எண், வாக்காளர் அட்டை எண் அல்லது பாஸ்போர்ட் எண்
- இருவரது கையொப்பங்கள்.
மேலும், வழங்கப்படும் தகவல்கள் உண்மையானவை என்பதற்கான உறுதிப்பத்திரமும், தவறான தகவலால் வழக்கு நிலை உருவானால் அதற்கு விண்ணப்பதாரரே முழுப்பொறுப்பாளியாக இருப்பதைத் தெரிவிக்கும் மறுப்புப்பத்திரமும் (disclaimer) இதில் அடங்கும்.
திருமணச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு!
இதுவரை, திருமணச் சான்றிதழ் இல்லாத தம்பதிகள், தங்கள் பாஸ்போர்ட் விவரங்களில் வாழ்க்கைத்துணையின் பெயரை சேர்க்க விரும்பும் போது, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அல்லது நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
அவர்களுக்கு Annexure J என்பது விருப்பத்தேர்வாக வழங்கப்படும். திருமணச் சான்றிதழ் இல்லாதவர்கள் மட்டும் இதனை பயன்படுத்தலாம்.
திருமணப் பதிவு சேவைகள்!
இந்திய தூதரகம்,திருமணமாகும் இருவரில் ஒருவர் இந்திய குடியுரிமை பெற்றவராகவும், ஐக்கிய அரபு அமீரக விசா வைத்திருப்பவராகவும், இருக்க வேண்டும். இந்நிலையில், அவர்கள் திருமணங்களை இந்திய வெளிநாட்டு திருமணச் சட்டம், 1969-ன் படி தூதரகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
மணமகன் அல்லது மணமகன் அல்லது இருவரும் முஸ்லிம்களாக இருக்கும் திருமணங்கள், ஐக்கிய அரபு அமீரக சட்டங்களின்படி ஷரியா நீதிமன்றத்தில் திருமண ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
