துபாய் குளோபல் வில்லேஜில் பயணிகளுக்கு இலவச அனுமதி!
துபாய் குளோபல் வில்லேஜின் 30வது சீசனை கொண்டாடும் விதமாக துபாய் விமான நிலையங்களில் வருகை பயணிகளின் பாஸ்போர்ட்டில் சிறப்பு முத்திரை இடப்படுகிறது. இந்த முத்திரை வைத்திருப்பவர்களுக்கு குளோபல் வில்லேஜில் அனுமதி இலவசம் என அறிவிக்கபட்டுள்ளது.
துபாய் அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரத்துறை அமைச்சகம் (GDRFA) துபாய் குளோபல் வில்லேஜுடன் இணைந்து இந்த ஏற்பாட்டை துபாய் விமான நிலையங்களில் செய்துள்ளது. இந்த சிறப்பு சலுகை துபாய் குளோபல் வில்லேஜ் தொடங்கும் அக்.15 முதல் 10 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பாஸ்போர்ட்டில் குளோபல் வில்லேஜ் முத்திரை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முறை மட்டுமே இலவச அனுமதி வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற, சிறப்பு முத்திரையானது பாஸ்போர்ட்டில் உள்ள சாதாரண நுழைவு முத்திரைக்கு அருகில் பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
துபாயின் கலாசாரப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையிலும், உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை குளோபல் வில்லேஜுக்கு வரவேற்கும் வகையிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான நகரங்களில் அபுதாபி முதலிடம்!
2025-இல் உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்களில் அபுதாபி முதலிடம் பிடித்துள்ளது. டைம் அவுட் மீடியா நடத்திய கருத்துக்கணிப்பில் மும்பை 5வது இடத்தையும், துபாய் 16வது இடத்தையும் பிடித்துள்ளது.
வாழ்க்கைத் தரம், சமூக உணர்வு மற்றும் தனிப்பட்ட திருப்தி குறித்து குடியிருப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மூலம் இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது. தரவரிசையில் அபுதாபிக்கு அடுத்தபடியாக மெடலின் மற்றும் கேப் டவுன் ஆகிய நகரங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.
மழை வேண்டி பிரார்த்தனை செய்ய அதிபர் அழைப்பு!
அமீரகத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை (அக்.17) தொழுகைக்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக சலாத் அல் இஸ்திஸ்கா (மழை வேண்டி பிரார்த்தனை) செய்யுமாறு அமீரக அதிபர் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்லாமிய மார்க்கத்தின் படி இதுபோன்ற மழை பொழிவு இல்லாத காலங்களில் மழை வருவதற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த தொழுகை ‘சலாத் அல் இஸ்திஸ்கா’ என அழைக்கப்படுகிறது.
நபிகள் நாயகத்தின் மரபுப்படி தேசத்திற்கு மழையையும் கருணையையும் அருள எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில், ”வெள்ளிக்கிழமை மதியம் நடைபெறும் ஜூம்ஆ தொழுகைக்கு அரை மணி நேரம் முன்னதாக (அதாவது மதியம் 12.45 மணி) நாட்டின் அனைத்து மசூதிகளிலும்
மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்த வேண்டும்.
முகம்மது நபியின் (ஸல்) வழிகாட்டுதலை பின்பற்றி மழையை பெறுவதற்கு சிறப்பு தொழுகையை நிறைவேற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
துபாய் சபாரி பூங்கா தீபாவளி நிகழ்ச்சி
துபாய் சபாரி பூங்காவில் தீபாவளியை கொண்டாடும் விதமாக இந்தியாவின் இசை, நடனம், உணவுகள், விளையாட்டுகள் அடங்கிய ‘Lights of the Wild’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை 5 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 18 முதல் 22 வரை, தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கும். பூங்காவின் வழக்கமான கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், இந்தியப் பண்பாட்டைக் கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்தினரிடையே முக்கிய பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுவதாலும், இந்தியர்கள் அதிகமானோர் வருகை புரிவார்கள் என்பதாலும் இந்த ஆண்டு துபாய் சபாரி பூங்காவில் முதல் முறையாக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை AED 50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அப்டேட்டாகும் NOL அட்டை!
துபாயில் பேருந்து மற்றும் மெட்ரோவில் பயன்படுத்தப்படும் NOL அட்டையில் கூடுதலாக பார்க்கிங், ஷாப்பிங், டைனிங் மற்றும் கல்வி தொடர்பான கட்டணங்கள் செலுத்தும் வசதியை கொண்டு வர துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
NOL அட்டை பயன்பாட்டை விரிவுபடுத்த அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA), Parkin மற்றும் PayPal உடன் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
துபாயை பணமில்லா, முழுமையான டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நோல் கார்டு இப்போது பார்க்கிங், ஷாப்பிங் மற்றும் கல்வி சார்ந்த கட்டணங்களுக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
