கடந்த 2000ஆம் ஆண்டில் 3.17 மில்லியனாக இருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகை, 2024ஆம் ஆண்டில் 11.3 மில்லியனாக மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அமீரக மக்கள் தொகை அதிகரிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2024ஆம் ஆண்டில், மக்கள் தொகை 11.3 மில்லியனை எட்டியுள்ளது. இது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.7% அதிகமாகும். அதன்படி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 7,235,074 பேரும் (64%), பெண்கள் 4,059,169 பேரும் (36%) உள்ளனர். 2023ஆம் ஆண்டில் 10,678,556-ஆக இருந்த அமீரக மக்கள் தொகை, 615,687 அதிகரித்து, 11,294,243 ஆக உயர்ந்துள்ளதாக கூட்டாட்சி போட்டித்திறன் மற்றும் புள்ளிவிவர மையம் (FCSC) தெரிவித்துள்ளது.
2000ஆம் ஆண்டு முதல், அமீரகத்தின் மக்கள் தொகை 3.17 மில்லியனிலிருந்து 11.3 மில்லியனாக மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஆண்கள் எண்ணிக்கை 2.25 மடங்கு அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பெண்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.
அபுதாபி மக்கள் தொகை
அபுதாபி புள்ளிவிவர மையத்தின் (SCAD), மக்கள்தொகை தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு 3.8 மில்லியனாக இருந்த அபுதாபியின் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 7.5% அதிகரித்து 4.14 மில்லியனாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி அபுதாபியின் வலுவான எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நீண்ட கால நிலையான வளர்ச்சி பார்வையை பிரதிபலிக்கிறது.
துபாய் மக்கள் தொகை
துபாய் புள்ளிவிவர மையத்தின் மக்கள் தொகை தரவுகளின்படி, செப்டம்பர் 8, 2025 அன்று, துபாயின் மக்கள் தொகை முதல் முறையாக 4 மில்லியனைத் தாண்டி, 4,006,656 குடியிருப்பாளர்களை எட்டியது.
2000ஆம் ஆண்டு முதல் துபாயின் மக்கள் தொகை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 917,000ஆக இருந்த மக்கள் தொகை 317% அதிகரித்து 2024ஆம் ஆண்டு இறுதியில் 3.825 மில்லியனை எட்டியது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 170,000 புதிய குடியிருப்பாளர்களை துபாய் வரவேற்றுள்ளது. உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதிலும் 2020ஆம் ஆண்டு முதல் துபாய் 414,000 குடியிருப்பாளர்களை வரவேற்றுள்ளது. இது துபாய் மக்கள் தொகையில் 12% வளர்ச்சியாகும்.
