அமீரகத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை (அக்.17) தொழுகைக்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக சலாத் அல் இஸ்திஸ்கா (மழை வேண்டி பிரார்த்தனை) செய்யுமாறு அமீரக அதிபர் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மழை வேண்டி பிரார்த்தனை:
நாட்டில் வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற நிலைகள் ஏற்படும் போது, அவற்றை களைவதற்காக மழை வேண்டி இறைவனிடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் என முகம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
சலாத் அல் இஸ்திஸ்கா:
அதன்படி இஸ்லாமிய மார்க்கத்தின் படி இதுபோன்ற மழை பொழிவு இல்லாத காலங்களில் மழை வருவதற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த தொழுகை ‘சலாத் அல் இஸ்திஸ்கா’ என அழைக்கப்படுகிறது.
அமீரக அதிபர் வேண்டுகோள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், வரும் அக்டோபர் 17, வெள்ளிக்கிழமை அன்று, நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளிலும் மழை வேண்டி சிறப்பு தொழுகை (சலாத் அல் இஸ்திஸ்கா) நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில், ”வெள்ளிக்கிழமை மதியம் நடைபெறும் ஜூம்ஆ தொழுகைக்கு அரை மணி நேரம் முன்னதாக (அதாவது மதியம் 12.45 மணி) நாட்டின் அனைத்து மசூதிகளிலும்
மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்த வேண்டும். முகம்மது நபியின் (ஸல்) வழிகாட்டுதலை பின்பற்றி மழையை பெறுவதற்கு சிறப்பு தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
இறைவனது கருணை மற்றும் கொடையால் மழையை பெறவும், நன்மையை பரப்புவதற்கும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமீரக அதிபர் அழைப்பின் பேரில் கடந்த 2024-ஆம் ஆண்டு மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
