அமீரக கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு கல்வியாண்டில் அதிகபட்சம் 15 நாட்கள் விடுமுறை எடுக்கலாம்.
2025-26 கல்வியாண்டு தொடங்கியதில் இருந்து பல்வேறு புதிய நடவடிக்கைகளை அமீரக கல்வி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி மாணவர்கள் ஒரு கல்வியாண்டில் எத்தனை நாட்கள் விடுமுறை எடுக்கலாம், எதற்கெல்லாம் விடுமுறை எடுக்கலாம் என்பதற்கான 5 வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விடுமுறைக்கான 5 வழிகாட்டுதல்கள்
- ஒரு பருவத்திற்கு அதிகபட்சம் 5 நாட்களும், ஒரு கல்வியாண்டிற்கு அதிகபட்சம் 15 நாட்களும் விடுமுறை எடுக்கலாம். விடுமுறை 15 நாட்களை கடந்தால், முழு கல்வியாண்டையும் மீண்டும் தொடர வேண்டும்.
- நியாயமான காரணமின்றி ஒரு நாள் பள்ளிக்கு வராமல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடைமுறைகள் தொடங்கப்படும். அதேபோல், தொடர்ந்து 15 நாட்கள் வரை காரணமின்றி பள்ளிக்கு வராமல் இருந்தால், அந்த மாணவர் மற்றும் அவரின் பெற்றோர் குறித்த தகவல்கள் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படும்.
- வெள்ளிக்கிழமைகளில் அல்லது அதிகாரப்பூர்வ அரசு விடுமுறைக்கு முந்தைய அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் விடுமுறை எடுத்தால் அது இரண்டு நாட்கள் விடுமுறையாக கணக்கிடப்படும்.
- மாணவர் பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்தால் அது குறித்து பெற்றோருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும்.
- மாணவரின் விடுமுறை குறித்து அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஐந்து வேலை நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய பெற்றோருக்கு உரிமை உண்டு.
