துபாய் மால் மெட்ரோ விரிவாக்கம் முதல் ரமலான் மாதம் அறிவிப்பு வரை; அமீரகத்தில் இந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்!

இந்த வாரத்தில் நடைபெற்ற முக்கியமான செய்திகள்!

 இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை இத்தொகுப்பில் காணலாம்.

துபாய் மால் மெட்ரோ நிலையம் விரிவாக்கம்

புர்ஜ் கலீஃபா – துபாய் மால் மெட்ரோ நிலையம் ஒரு நாளைக்கு 220,000 பயணிகளை கையாளும் வகையில் 8,500 சதுர மீட்டராக விரிவுபடுத்தவுள்ளதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தால் ஒரு மணி நேரத்தில் பயணிகளை கையாளும் திறன் 7,250-லிருந்து 12,320 ஆக அதிகரிக்கும். இது 65% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைமேடை விரிவாக்கம், கூடுதல் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிஃப்ட்கள், கூடுதல் நுழைவு வாயில்கள், கூடுதல் வணிகப் பகுதிகள் உள்ளிட்டவை இந்த விரிவாக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். 

புத்தாண்டு கொண்டாட்டங்கள், பொது விடுமுறைகள் மற்றும் தேசிய நிகழ்வுகள் போன்ற சமயங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த விரிவாக்கத் திட்டம்  உருவாக்கப்பட்டதாக RTA தெரிவித்துள்ளது.

0 விபத்து – பெண் ஓட்டுநருக்கு விருது!

கடந்த 4 ஆண்டுகளாக விபத்து ஏற்படுத்தாமல், விதிகளை மீறாமல் வாகனம் ஓட்டிய காவல்துறை பெண் ரோந்து ஓட்டுநருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது துபாய் காவல்துறை.

ஏழு குழந்தைகளுக்கு தாயாக உள்ள துபாய் காவல்துறையை சேர்ந்த பெண் ரோந்து ஓட்டுநர் அம்னா ரஷீத் அல் ப்ளூஷி-க்கு ‘Safe Driving Stars’ என்ற துபாய் காவல் துறையின் போக்குவரத்து விழிப்புணர்வு முயற்சியின் கீழ் விருது வழங்கப்பட்டது. 

தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக நடைபெறும் இந்நிகழ்வில், இந்த ஆண்டு காவல்துறையை சேர்ந்த 66 ஓட்டுநர்களுக்கு விருது வழங்கப்பட்ட நிலையில், அம்னா ரஷீத் அல் ப்ளூஷி மட்டுமே பெண் ஆவார்.

திருமணத்திற்கு 8 நாட்கள் விடுப்பு!

ஷார்ஜா அரசு ஊழியர்களுக்கு 8 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஷார்ஜாவின் புதிய மனிதவள சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் புதிய மனிதவள ஆணையின் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்களுக்கு எட்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை பராமரிப்பதற்காக பெண் ஊழியர்களுக்கு, பேறுகால விடுப்புடன் அதிகபட்சம் 3 ஆண்டுகள் “பராமரிப்பு விடுப்பு” வழங்கும் திட்டத்தையும் ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது.

வீட்டை அறைகளாக பிரித்து வாடகைக்கு விட தடை

துபாயில் வீடுகளை சட்டவிரோதமாக அறைகளாக பிரித்து வாடகைக்கு விடப்படுவதை கண்டறிந்து அதன் உரிமையாளர்கள் மீது துபாய் நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

துபாய் நிலத் துறை மற்றும் துபாய் பொது சிவில் பாதுகாப்பு இயக்குநரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து துபாய் நகராட்சி; அல் ரிக்கா (Al Rigga), அல் முரக்காபத்(Al Muraqqabat), அல் பர்ஷா(Al Barsha), அல் சத்வா(Al Satwa) மற்றும் அல் ரஃபா(Al Raffa) போன்ற நகரில் மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. 

கட்டிட உரிமையாளர்களுக்கு விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் குறித்து கடிதங்கள் மூலம் பலமுறை எச்சரிக்கை விடுத்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஈரான் அதிபருடன் உரையாடிய அமீரக அதிபர்

தொலைபேசியில் ஈரான் அதிபருடன் உரையாடிய அமீரக அதிபர், இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்றார். இது மத்திய கிழக்கில் பாதுகாப்பு & அமைதியை மேம்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் தொடர்ந்து 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நடைபெற்றது. இதற்கிடையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.  அதே போல் ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப் படை தளங்களை குறிவைத்து நேற்று முன்தினம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளும் முழுமையான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.  

இந்த நிலையில், ஜூன் 24ஆம் தேதி அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை தொலைபேசியில் அழைத்து உரையாடிய ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமீரகம் எங்களுடனான தனது நிலைப்பாடு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

2026 ரமலான் மாதம் எப்போது தொடங்கும் என அறிவிப்பு:

அடுத்த ஆண்டு ரமலான் மாதம் பிப்ரவரி 18, புதன்கிழமை தொடங்கும் என்று வானியல் கணக்கீடுகளின்படி அமீரக வானியல் மையம் தெரிவித்துள்ளது. 

பிப்ரவரி 18 ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்கும் என்று அமீரக வானியல் சங்கம் தெரிவித்திருந்தாலும், பிறை தெரிந்த பிறகே அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும். பிப்ரவரி 18 ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்கும் என்று அமீரக வானியல் சங்கம் தெரிவித்திருந்தாலும், பிறை தெரிந்த பிறகே அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும்.

TAGGED: