ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வாரம் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பதிவில் சுருக்கமாக பார்க்கலாம்.
21 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் பதிவு
மே 24 அன்று அல் ஐனில் உள்ள ஸ்வீஹானில் மதியம் 1:45 மணிக்கு 124.88°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 2003-ஆம் ஆண்டு முதல் அமீரகத்தில் மே மாதம் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்று தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.
கடந்த மே 23-ஆம் தேதி பதிவான 122.72°F அதிகபட்சமான வெப்பநிலையாக இருந்த நிலையில், தற்போது அதையும் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
காருக்குள் சிக்கிய குழந்தையை மீட்ட காவல்துறை
பெற்றோரின் கவனக்குறைவால் பூட்டிய காருக்குள் சிக்கிக்கொண்டு போராடிய 2 வயது சிறுவனை, விரைந்து செயல்பட்டு காப்பாற்றியது துபாய் காவல்துறை.
காரை நிறுத்திவிட்டு ஷாப்பிங் சென்ற தாய் வந்து பார்த்த போது, குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்டு மூச்சு விட முடியாமல் தவிப்பதை கண்டு காவல்துறையை அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.
இரு உயிரை காத்த இறந்தவரின் கல்லீரல்
Split Liver Transplant எனும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் In-situ எனும் செயல்முறை மூலம் இறந்தவரின் கல்லீரலை பிரித்து 6 மாத குழந்தைக்கும், வயது வந்த ஒரு நோயாளிக்கும் பொருத்தி துபாயின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
பிரிக்கப்பட்ட இறந்தவரின் கல்லீரலில் மூன்றில் ஒரு பங்கு பித்தநீர் குழாய் அடைப்பு நோய் இருந்த 6 மாத குழந்தைக்கும் மீதமுள்ள இரண்டு பங்கு கல்லீரல் ஸ்க்லரோசிங் கோலாங்கிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கும் பொருத்தப்பட்டது.
வங்கி கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை உயர்த்தப்படாது
ஜூன் 1-ம் தேதி முதல் குறைந்தபட்ச இருப்புத் தொகை AED 3,000-ல் இருந்து AED 5,000 ஆக உயர்த்தப்படும் என்றும், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத கணக்குகளுக்கு AED 105 மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்திருந்தது.
இந்த புதிய வங்கி கொள்கையால் குடியிருப்பாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிதிச்சுமை உண்டாக்கும் என விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கையை வங்கிகள் நிறுத்த அமீரக மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
போலி ஜம்ஜம் தண்ணீர் விற்றவர் கைது
ஷார்ஜா குடியிருப்பு பகுதி ஒன்றில் சந்தேகத்திற்கு புறம்பான வகையில் சென்ற வாகனத்தை சோதனை செய்ததில் அதன் உள்ளே ஜம்ஜம் தண்ணீர் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் குறித்து காவல்துறை சோதனை நடத்தியது. அதில், தொட்டி தண்ணீரை பாட்டிலில் நிரப்பி ஜம்ஜம் தண்ணீர் என்று ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனை தொடர்ந்து இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபரை ஷார்ஜா காவல்துறை கைது செய்தது. விசாரணையில் மினரல் வாட்டர் நிறுவனம் என்று உரிமம் பெற்று இந்த மோசடி வேலையை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.
அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பக்ரீத் விடுமுறை
துல் ஹஜ்ஜாவின் துவக்கத்தை குறிக்கும் பிறை அமீரகத்தில் மே 27 அன்று தென்பட்டதை தொடர்ந்து பக்ரீத் பண்டிகை ஜூன் 06 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஜூன் 5 முதல் ஜூன் 8 வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவித்தது அமீரகம். அதேபோல் தனியார் ஊழியர்களுக்கு ஜூன் 5 முதல் ஜூன் 8 வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை MOHRE அறிவித்தது.
இதை தொடர்ந்து தனியார் துறை ஊழியர்களின் கல்விப் பட்டங்களைச் சரிபார்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறது. அமீரகத்திற்கு வெளியே வழங்கப்பட்ட கல்விப் பட்டங்களைக் கொண்ட தொழிலாளர்களுக்குப் பொருந்தும் 1 முதல் 4 வரையிலான திறன் நிலைகளை உள்ளடக்கியது. இந்த சேவையை, அமீரக மனிதவள அமைச்சகம் (MoHRE) துவக்கியுள்ளது.
