H-1B விசா கட்டண உயர்வால் திர்ஹாமிற்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு சரிவு!

அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு எதிர்பாராத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

இந்திய ரூபாயின் சரிவு:

அமெரிக்கா விசா கட்டணத்தை உயர்த்தியதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு எதிர்பாராத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.62 ஆக குறைந்துள்ளது.

இது இரண்டு வாரங்களுக்கு முன் இருந்த ரூ.88.45 என்ற சாதனையை முறியடித்து உள்ளது. இதையடுத்து திர்ஹாமுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீட்டிற்கு பணம் அனுப்பினால் ஒரு திர்ஹாமிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 24.1 பெறுவார்கள். 

காரணமும், பாதிப்புகளும்:

H-1B விசா கட்டணத்தை உயர்த்தியதே இதற்கு காரணம் ஆகும். இதனால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களின் வாய்ப்பு குறையலாம். அதுமட்டுமின்றி இந்திய ஐடி துறையில் லாபத்தில் பாதிப்பு ஏற்படலாம். 

அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தால் இந்தியா உடனான பணப்பரிமாற்றம் குறையும். இதனால் இந்தியாவிற்கு வரும் டாலரின் வருவாயும் பாதிக்கப்படும். இந்த விசா கட்டண உயர்வு இதுவரை இருந்த வெளிநாட்டு சிக்கல்களை மேலும் பெரிதாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்திருப்பது, ஆசிய நாடுகளுக்கு இடையேயான போட்டி ஆகியவை விநியோகத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கியாளர்கள் கருத்து:

இது குறித்து ANZ வங்கியின் FX நிபுணர் திராஜ் நிம் கூறுகையில், அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்திருப்பது, சமீபத்திய விசா கட்டண உயர்வு ஆகியவற்றால் பங்குச் சந்தை முதலீட்டில் குறிப்பாக ஐடி துறையில் அதிக அழுத்தத்தை உண்டாக்குகிறது என்றார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியில் ரூபாயின் மதிப்பு பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி 2026-27 ஆம் நிதியாண்டில் 4 முதல் 4.5% வரை பணவீக்கத்தை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

ரிசர்வ் வங்கி இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கான அறிகுறிகள் உள்ளன. எந்தவொரு குறிப்பிட்ட அளவையும் பாதுகாக்காமல், ரூபாயை ஆதரிக்க சந்தையில் மத்திய வங்கி தலையிட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு குறைவதை கட்டுப்படுத்த வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் சந்தையில் குழப்பம் இல்லாமல் சரி செய்ய முடியும் என்று வங்கியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு தொடங்கியது முதல் இன்று வரை, ஆசிய நாடுகளின் மதிப்புடன் ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பு பின்தங்கி உள்ளது. டாலர் குறியீட்டின் சமீபத்திய சரிவால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் கடுமையான வரிகள் ஏற்றுமதி வாய்ப்புகளை குறைத்து, வெளிநாட்டு மூலதன வரவைக் குறைத்து, ரூபாயின் மதிப்பைப் பாதித்துள்ளது.