ஜகாத் அல் பித்ர் தொகை அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபத்வா கவுன்சில் 2026-ஆம் ஆண்டுக்கான ரமலான் மாத ஜகாத் அல் பித்ர் (Zakat Al Fitr) மற்றும் பித்யா (Fidyah) தொகைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- ஜகாத் அல் பித்ர் (Zakat Al Fitr) தொகையாக ஒரு நபருக்கு 2.5 கிலோ அரிசி அல்லது அதற்கு ஈடாக AED 25 பணமாக வழங்கலாம்.
- பித்யா (Fidyah) தொகையாக 3.25 கிலோ கோதுமை அல்லது AED 20 பணமாக வழங்க வேண்டும்.
- நோன்பை வேண்டுமென்றே முறித்தால், அதற்கு பரிகாரமாக AED 1,200 வழங்க வேண்டும்.
- செய்த சத்தியத்தை மீறினால், AED 200 வழங்க வேண்டும்.
- ஹஜ் மற்றும் உம்ரா கடமையின் போது தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்தால், AED 120 வழங்க வேண்டும் என ஃபத்வா கவுன்சில் அறிவித்துள்ளது.
துபாயில் பள்ளி நேரம் குறைப்பு!
ரமலான் மாதத்தில் மாணவர்களின் நலன் கருதி, ஒரு நாளின் மொத்த பள்ளி நேரம் அதிகபட்சம் 5 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் ரமலான் மாதம் வருகிற பிப். 19ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த மாதத்தில் துபாயில் உள்ள பள்ளிகள் தினமும் 5 மணி நேரம் மட்டுமே இயங்கும் என்றும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பள்ளிகள் காலை 11.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் துபாய் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) அறிவித்துள்ளது.
பள்ளிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தைத் தீர்மானிக்கும்போது, பெற்றோர்களின் கருத்துகளையும் கேட்டு அதற்கேற்ப செயல்படுமாறு KHDA அறிவுறுத்தியுள்ளது.
குளோபல் வில்லேஜ் செயல்படும் நேரங்கள் மாற்றம்
துபாயின் பிரபலமான குளோபல் வில்லேஜ் அதன் 30-வது சீசனைக் கொண்டாடி வருகிறது. ரமலான் மாதத்தை முன்னிட்டு குளோபல் வில்லேஜ் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
அதன் படி, ஞாயிறு முதல் புதன் வரை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையும், வியாழன் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும் குளோபல் வில்லேஜ் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட சுற்றுலாத் தலம் அமைக்க திட்டம்
துபாயில் திறந்தவெளி சினிமா, 2.5 மில்லியன் சதுர அடியில் ஏரி உள்ளிட்ட வசதிகளுடன் 10 மில்லியன் சதுர அடி பரப்பளவில் Al Layan Oasis என்ற புதிய பிரம்மாண்ட சுற்றுலாத் தலம் அமைக்கப்படவுள்ளதாக துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மையப்பகுதியில் 2.5 மில்லியன் சதுர அடி அளவில் ஒரு பிரம்மாண்ட ஏரி உருவாக்கப்படும். இந்த சுற்றுலா தலம் ஹப் பார்க், பேமிலி பார்க், கேன்யான் பார்க் மற்றும் டிரைலர் பார்க் ஆகிய 4 பகுதிகளை கொண்டிருக்கும்.
இதில் திறந்தவெளி சினிமா, 100 கேரவன் தங்கும் இடங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள் மற்றும் உணவு அங்காடிகள், 14 கி.மீ நீள நடைபாதை மற்றும் சைக்கிள் டிராக் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளது. துபாய் நகர மையத்திலிருந்து சுமார் 50 நிமிட பயண தூரத்தில், பாலைவன சூழலில் இது அமையவுள்ளது.
தினமும் 8,000 பேருக்கு இஃப்தார் உணவு !
துபாய் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் ஒருவர் ரமலான் மாதம் முழுவதும் தினமும் 8,000 பேருக்கு இஃப்தார் உணவு வழங்கும் வகையில், பல மில்லியன் திர்ஹம்கள் செலவில் இப்தார் கூடாரத்தை அமைத்துள்ளார்.
துபாயின் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் இந்த மிகப்பெரிய இப்தார் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் சுமார் 8,000 பேருக்கு இங்கு உணவு வழங்கப்படும். இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் ஒருவர் தனது சொந்தச் செலவில் ஏற்றுள்ளார்.
இதன் மதிப்பு பல மில்லியன் திர்ஹம்கள் ஆகும். அதிகாலையிலேயே சமையல் தொடங்கி, தரம் மற்றும் பாதுகாப்புடன் மாலைக்குள் உணவு விநியோகம் செய்யப்படவுள்ளது.
