வங்கிகளில் தனிநபர் கடன் பெறுவதற்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பாக இருந்த AED 5,000-ஐ நீக்கி அமீரக மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு வங்கியில் கடன் பெற முடியும்.
AED 5,000 என்ற வரம்பு நீக்கம்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி (UAE Central Bank) தனிநபர் கடன் பெறுவதற்கு இருந்த நிபந்தனையான குறைந்தபட்ச மாத சம்பளம் AED 5,000 என்ற வரம்பை நீக்கியுள்ளது. இந்த முக்கியமான முடிவானது, நாட்டில் வசிக்கும் குறைந்த வருமானம் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கடன் பெறுவதற்கு உதவும்.
தனியார் வங்கிகளில் தனிநபர் கடன் பெறுவதற்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பாக இருந்த AED 5,000-ஐ அமீரக மத்திய வங்கி (CBUAE) நீக்கியுள்ளது. இருப்பினும் பயனர்களுக்கு எவ்வளவு கடன் தொகை வழங்குவது அதற்கான வட்டி விகிதத்தை உங்கள் ஊதியத்தை பொறுத்து வங்கியை தீர்மானிக்கும்.
இதனால் குறைந்த சம்பளம் வாங்குவோர், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட அமீரகத்தில் வசிக்கும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றும் நிதிச் சேவைகளைப் பெறுவது எளிதாகும்.
எப்படி செயல்படுகிறது?
இந்த வங்கிக் கணக்குகள் மத்திய வங்கியின் ஊதியப் பாதுகாப்பு அமைப்புடன் (WPS – Wage Protection System) இணைக்கப்படும். இதனால், நீலச்சட்டை தொழிலாளர்கள் (blue-collar workers) மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் மாதாந்திர சம்பளம் வங்கிக் கணக்கிற்கு வந்தவுடன், அதிலிருந்து கடன் தவணையை வங்கி தானாகவே எடுத்துக்கொள்ளும்.
இந்த நடவடிக்கை, அமீரகம் முழுவதும் நிதிச் சேர்க்கையை விரிவுபடுத்துவதையும், அனைவரும் பாதுகாப்பான, ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கிச் சேவைகளை பெறுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
