துபாயில் எத்தனை அரசு துறைகள் உள்ளன? அவை நிர்வகிக்கும் பணிகள் என்ன?

துபாய் அரசின் கீழ் 13 துறைகள், 8 ஆணையங்கள், 10 பொதுத்துறை நிறுவனங்கள், 3 சட்ட அமைப்புகள், 3 கல்வி நிறுவனங்கள், 3 கவுன்சில்கள், 2 நீதித்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு தரவுகள் மையம் உள்ளன. 

உள்ளடக்கம்
ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கம்துபாய் அரசு துறைகள்பொருளாதார மேம்பாட்டுத் துறைநிதித்துறை வணிக மற்றும் சுற்றுலாத்துறை துபாய் சேம்பர்  சுங்கத்துறை டிஜிட்டல் துபாய் அரசு மனிதவளத் துறை துபாய் மாநகராட்சி நிதி தணிக்கைத் துறைஇஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை அக்டோபர் 24, 1969 அன்று மறைந்த மாண்புமிகு ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் பிறப்பித்த ஆணையின் மூலம் அறக்கட்டளைத் துறை தொடங்கப்பட்டது.பிறகு இத்துறை படிப்படியாக விரிவடைய தொடங்கியதை தொடர்ந்து 1994-ஆம் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொண்டு பணிகளை நிர்வகித்தல், இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் மசூதிகள் விவகாரங்கள் ஆகியவற்றை நிர்வாகத்தில் இத்துறையின் முக்கிய நடவடிக்கைகள் ஆகும். நிலத்துறை நெறிமுறைத் துறை அரசாங்க சட்ட விவகாரத்துறை ஆணையங்கள் துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம்சமூக மேம்பாட்டு ஆணையம்துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணையம்துபாய் சுகாதார ஆணையம் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்துபாய் விமான நிலைய இலவச மண்டல ஆணையம்பொதுத்துறை நிறுவனங்கள்வக்ஃப் மற்றும் சிறார் விவகார அறக்கட்டளைதுபாய் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கார்ப்பரேஷன்துபாய் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்துபாய் அரசு பட்டறைதுபாய் மீடியா இன்கார்பரேட்டட்துபாய் விமான நிலையங்கள் முகமது பின் ரஷீத் வீட்டுவசதி நிறுவனம்துபாய் மகளிர் நிறுவனம்நெடா- தொழில்முறை தொடர்பு கழகம்முகமது பின் ரஷீத் விண்வெளி மையம்சட்ட அமலாக்க அமைப்புகள்துபாய் சிவில் பாதுகாப்பு துபாய் காவல்துறை அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் முகமது பின் ரஷீத் அரசுப் பள்ளிஹம்தான் பின் முகமது ஸ்மார்ட் பல்கலைக்கழகம்துபாய் நீதித்துறை நிறுவனம்கவுன்சில்கள்துபாய் விளையாட்டு கவுன்சில்துபாய் நிர்வாகக் குழுஉச்ச எரிசக்தி கவுன்சில்நீதித்துறை நிறுவனங்கள்துபாய் நீதிமன்றங்கள்துபாய் பொது வழக்குரைஞர்மையங்கள்துபாய் புள்ளிவிவர மையம்

ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கம்

1971ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய 6 எமிரேட்கள் இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடு உருவாக்கப்பட்டது. 

அதன் பின்னர் 1972ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமீரகத்தின் ஏழாவது எமிரேட்டாக ராஸ் அல் கைமா இணைக்கப்பட்டது.

அதன் தலைநகராக அபுதாபி செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மத்திய அரசு மற்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில அரசு என்று இருப்பது போல அமீரகத்திலும் இருக்கிறது. ஆனால் இங்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்று குறிப்பிடுவது இல்லை.

ஒட்டுமொத்த அமீரகத்திற்கும் தனியாக அரசு துறைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு எமிரேட்டுகளுக்கும் தனித்தனியே அரசாங்கமும், ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் உள்ளனர். என்னதான் அபுதாபி தலைநகராக இருந்தாலும் அமீரகத்தின் பிரபலமான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக துபாய் விளங்குகிறது. 

துபாய் அரசு துறைகள்

உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களையும், முதலீட்டையும் எமிராட்டிகள் தொடர்ந்து ஈர்த்து வருவதால், உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக துபாய் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

துபாய் புள்ளிவிவர மையம் (DSC) வெளியிட்ட ஆகஸ்ட் மாத தகவலின்படி, துபாயின் மக்கள் தொகை 3,999,070 ஆகும். இவர்கள் அனைவரையும் நிர்வகித்து, சட்ட ஒழுங்கை பாதுகாக்க துபாயில் பல்வேறு துறைகள் மற்றும் ஆணையங்கள் செயல்பட்டு வருகிறது. 

நிதி, நீதி, வணிகம், சுற்றுலா, சுங்கம் உள்ளிட்ட 10 நடவடிக்கைகளுக்கு துபாய் அரசு துறைகளை அமைத்துள்ளது. 

பொருளாதார மேம்பாட்டுத் துறை

துபாயை பன்முகப்படுத்தப்பட்ட, புதுமையான, சேவை சார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதை பொருளாதார மேம்பாட்டுத் துறை (DED) ஆதரிக்கிறது. திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குகின்றன. 

மூலோபாயத் துறைகளின் வளர்ச்சியை அடையாளம் கண்டு ஆதரிக்கின்றன. மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு சேவைகளை வழங்குகின்றன.

நிதித்துறை 

1995ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிதித்துறை துபாய் அரசாங்கத்தின் அனைத்து நிதி மற்றும் கணக்கியல் விவரங்களை மேற்பார்வையிடும். அரசாங்கத்தின் பொது வருடாந்திர பட்ஜெட்டை உருவாக்குவதற்கும், ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை அனைத்து தொடர்புடைய துறைகளுக்கும் வழங்கும். மேலும் அரசாங்கத்தின் வங்கிக் கணக்குகளையும் மேற்பார்வையிடுகிறது.

வணிக மற்றும் சுற்றுலாத்துறை 

துபாயின் வணிக மற்றும் சுற்றுலாத் துறைகளைத் திட்டமிடுதல், மேற்பார்வை செய்தல், மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான முதன்மை அங்கீகாரம் வணிக மற்றும் சுற்றுலாத்துறையிடம் (DET) உள்ளது. ஹோட்டல்கள், சுற்றுலா நடத்துபவர்கள் மற்றும் பயண முகவர்கள் உட்பட அனைத்து வகையான வணிகங்களுக்கும் உரிமம் வழங்குதல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் இத்துறை பொறுப்பாகும்.

துபாய் சேம்பர்  

துபாயின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வணிக வளர்ச்சியின் உந்துசக்தியாக துபாய் சேம்பர்ஸ் உள்ளது. துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ், துபாய் இன்டர்நேஷனல் சேம்பர் மற்றும் துபாய் சேம்பர் ஆஃப் டிஜிட்டல் ஆகியவை துபாய் சேம்பரின் கீழ் இயங்கும் அமைப்பாகும்.

துபாய் சேம்பர்ஸ் உள்ளூர் வணிக சமூகத்தை மேம்படுத்துகிறது, சர்வதேச கூட்டாண்மைகளை உருவாக்குகிறது மற்றும் வலுப்படுத்துகிறது.

சுங்கத்துறை 

துபாய் சுங்கத்துறை, நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உலகளவில் துபாயின் நற்பெயரை மேம்படுத்துவதிலும் பங்கேற்கும் முன்னணி அரசுத் துறைகளில் ஒன்றாகும். சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள  தடைசெய்யப்பட்ட பொருட்களை துபாய்க்குள் அல்லது துபாய் வழியாக கடத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக சுங்கத்துறை செயல்படுகிறது. 

டிஜிட்டல் துபாய் 

டிஜிட்டல் துபாய் 2023ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு அரசு துறையாகும். இது துபாயில் வாழ்க்கையை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டது, மக்களுக்கு சேவை செய்வதற்கும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

அரசு மனிதவளத் துறை 

அமீரகத்தில் அரசு பணியாளர்களை நிர்வகிப்பது அரசு மனிதவளத் துறையின்  (DGHR) மிக முக்கிய பணியாகும். அதுமட்டுமின்றி அரசாங்க செயல்பாடுகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்குமான திட்டங்களை அரசு மனிதவளத் துறை மேற்கொள்கிறது.

துபாய் மாநகராட்சி 

துபாய் மாநகராட்சி என்பது துபாயின் மிகப் பழமையான துறையாகும், இது 1954ஆம் ஆண்டு துபாயின் தந்தையான மாண்புமிகு ஷேக் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் நிறுவப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சியை வடிவமைத்தல், பொது சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணித்தல், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற பொது இடங்களை நிர்வகித்தல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், கழிவு மேலாண்மையை செயல்படுத்துதல் என நகரின் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. 

நிதி தணிக்கைத் துறை

2018ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிதி தணிக்கைத் துறை பொது நிதியை பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நேர்மை மற்றும் நிர்வாகச் சிறப்பை மேம்படுத்துவது போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த துறை துபாயின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதை ஆதரிக்கும் புதுமையான தொழில்முறை சேவைகளை வழங்குகிறது.

இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை 

அக்டோபர் 24, 1969 அன்று மறைந்த மாண்புமிகு ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் பிறப்பித்த ஆணையின் மூலம் அறக்கட்டளைத் துறை தொடங்கப்பட்டது.

பிறகு இத்துறை படிப்படியாக விரிவடைய தொடங்கியதை தொடர்ந்து 1994-ஆம் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொண்டு பணிகளை நிர்வகித்தல், இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் மசூதிகள் விவகாரங்கள் ஆகியவற்றை நிர்வாகத்தில் இத்துறையின் முக்கிய நடவடிக்கைகள் ஆகும். 

நிலத்துறை 

துபாயின் மிக முக்கிய துறையாக விளங்கும் நிலத்துறை நகரின் ரியல் எஸ்டேட் தொடர்பான பணிகளை நிர்வகித்து வருகிறது. சொத்துக்களை ஆய்வு செய்தல், நிலம் தொடர்பான சான்றிதழ்களை ஆவணப்படுத்தல், தணிக்கை செய்தல், ரியல் எஸ்டேட் முதலீட்டை ஒழுங்கமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் நிலத்துறை ஈடுபடுகிறது. 

நெறிமுறைத் துறை 

துபாய் ஆட்சியாளர், துபாய் இளவரசர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அரச குடும்பத்தினர் ஆகியோரின் வருகையை ஒருங்கிணைத்தல் மற்றும் நெறிமுறைபடுத்துதல், அவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் ஆகியவை நெறிமுறைத் துறையின் முக்கிய பணியாகும். 

அரசாங்க சட்ட விவகாரத்துறை 

துபாய் அரசின் சட்ட முறைமைகளைக் கண்காணித்து, அரசு துறைகள் சட்டபூர்வமாக செயல்படுவதற்கு வழிகாட்டும் முக்கிய அமைப்பாக துபாய் சட்ட விவகாரத் துறை (LAD) செயல்படுகிறது.

துபாய் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குதல், அரசு சார்ந்த வழக்குகளில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்தல் ஆகியவை அரசாங்க சட்ட விவகாரத் துறையின் முக்கிய பணியாகும். மேலும் புதிய சட்டங்கள், விதிகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றை தயாரித்து, அவை சட்டப்படி சரியாக உள்ளனவா என்பதை இத்துறை ஆய்வு செய்கிறது.

ஆணையங்கள் 

நேரடியாக மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் உள்ள போக்குவரத்து, குடிநீர், கல்வி உள்ளிட்டவற்றை நிர்வகிக்க ஆணையங்களை துபாய் அரசு அமைத்துள்ளது.

துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம்

துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (DEWA) என்பது துபாயில் மின்சாரம் மற்றும் நீர் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்கு பொறுப்பான துறையாகும். இது தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது நிகழ்வுகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், பில்லிங் தொடர்பான மேலாண்மை சேவைகளை வழங்குகிறது. 

சமூக மேம்பாட்டு ஆணையம்

சமூக மேம்பாட்டுக்கான கட்டமைப்பை அமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சமூக மேம்பாட்டு ஆணையம் (CDA) பொறுப்பாகும். இதில் துபாயின் விரிவான மூலோபாயத் திட்டங்களைத் தயாரித்தல், செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் வெளியீடுகளை மேம்படுத்த சமூக சேவைகள் தொடர்பான சட்டத்தை முன்மொழிதல் ஆகியவை அடங்கும்.

துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்

துபாயில் சிவில் விமான போக்குவரத்து விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு 2007ஆம் ஆண்டு துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (DCCA) அமைக்கப்பட்டது. விமான போக்குவரத்து மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு, முதலீடு மற்றும் வணிக நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை இத்துறை கவனிக்கும். 

துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணையம்

அமீரகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும் அவற்றை  பல்வேறு வழிகளில் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணையம் செயல்படுகிறது.

கலை மற்றும் கலாச்சாரத்திற்கான உலகளாவிய மையமாகவும், படைப்பாற்றலுக்கான காப்பகமாகவும், திறமைக்கான செழிப்பான மையமாகவும் துபாயின் நிலையை மேம்படுத்த பல்வேறு நாகரிகங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே ஆக்கபூர்வமான உரையாடலின் பாலங்களை உருவாக்குவதில் இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது.

துபாய் சுகாதார ஆணையம் 

துபாய் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் உறுதி செய்யும் வகையில் துபாய் சுகாதார ஆணையம் (DHA) இயங்கி வருகிறது.

மேலும் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகளுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் கண்காணித்தல் பணிகளை மேற்கொள்கிறது. அத்துடன் துபாயில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு துபாய் சுகாதார ஆணையம் பொறுப்பாகும்.

அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம்

KHDA என்று பிரபலமாக அறியப்படும் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் துபாயில் தனியார் கல்வித் துறைக்கு பொறுப்பான அரசு அமைப்பாகும். மழலை பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை உள்ள கல்வி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல், அவற்றை ஆய்வு செய்தல் மற்றும் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பை வழங்குதல் ஆகியவை இந்த ஆணையத்தின் முக்கிய பங்காகும். 

சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்

துபாயில் சாலை மற்றும் பொது போக்குவரத்து தொடர்பான சேவைகளை நிர்வகிக்கும் அரசு அமைப்பாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) செயல்படுகிறது. இது துபாய் மெட்ரோ, பேருந்துகள், டாக்சிகள், டிராம், படகு டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்துகளை இயக்கி வருகிறது. மேலும் ஓட்டுநர் உரிமங்கள், வாகன உரிமங்கள், சாலை பராமரிப்பு, பார்க்கிங், சாலை கட்டுமானங்கள் உள்ளிட்ட பொறுப்புகளையும் RTA நிர்வகித்து வருகிறது. 

துபாய் விமான நிலைய இலவச மண்டல ஆணையம்

துபாய் விமான நிலைய இலவச மண்டல ஆணையம் (DAFZA) என்பது துபாய் சர்வதேச விமான நிலையம் அருகில் அமைந்துள்ள ஒரு சிறப்பு வணிக மற்றும் வர்த்தக மண்டலம் ஆகும். இங்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது நிறுவனங்களை 100% உரிமையுடன் தொடங்கலாம். வரி சலுகைகள், இறக்குமதி–ஏற்றுமதி சுங்க விலக்கு, எளிதான வணிக அனுமதி போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள்

மக்கள் நலன் மற்றும் நாட்டின் முன்னேற்ற சேவைகளுக்காக சில பொதுத்துறை நிறுவனங்களை துபாய் அரசு நிர்வகித்து வருகிறது. 

வக்ஃப் மற்றும் சிறார் விவகார அறக்கட்டளை

வக்ஃப் மற்றும் சிறார் விவகார அறக்கட்டளை (AMAF) நன்கொடை மூலம் பெறப்படும் நாட்டின் இஸ்லாமிய சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. மேலும் சிறார்களின் நலனுக்காகவும் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்வி உதவிகளை வழங்குவதற்கான திட்டங்களை அமைத்து இந்த அறக்கட்டளை நிர்வகிக்கிறது.

துபாய் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கார்ப்பரேஷன்

இது துபாய் முழுவதும் 24 மணிநேரமும் அவசர மருத்துவ சேவைகள் (Ambulance Services) வழங்கும் அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாகும். விபத்துகள், உடல்நல அவசர நிலைகள், மருத்துவ அவசரம், பேரிடர் சம்பவங்கள் போன்ற சூழ்நிலைகளில் ஆம்புலன்ஸ் சேவை, அவசர மருத்துவ உதவி, மருத்துவ பரிசோதனை போன்ற சேவைகளை இந்த நிறுவனம் வழங்கும்.

துபாய் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்

துபாயில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய துபாய் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் உதவுகிறது. அதன்படி ஏற்றுமதி வளர்ச்சிக்கு தேவையான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை இந்த கழகம் வழங்கும்.

துபாய் அரசு பட்டறை

துபாய் அரசு பட்டறை என்பது (DGW) துபாய் அரசுத் துறைகளுக்கான வாகன பராமரிப்பு மற்றும் இதர சேவைகளை வழங்குகிறது. அதாவது, துபாயில் உள்ள காவல்துறை வாகனம், தீயணைப்பு துறை வாகனம், ஆம்புலன்ஸ், பொது போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களின் வாகனங்களை உள்ளிட்டவற்றுக்கு துபாய் அரசு பட்டறை சேவை செய்கிறது. 

துபாய் மீடியா இன்கார்பரேட்டட்

துபாய் மீடியா இன்கார்பரேட்டட் என்பது துபாய் அரசின் கீழ் செயல்படும் அதிகாரப்பூர்வ ஊடக நிறுவனம். 2003ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது டிவி சேனல்கள், ரேடியோ நிலையங்கள், செய்தி தளங்கள், அச்சு ஊடகங்கள் போன்றவற்றை நடத்தும் பெரிய அரசு மீடியா அமைப்பாகும். மேலும் இது மத்திய கிழக்கின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

துபாய் விமான நிலையங்கள் 

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் – அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (DWC) ஆகிய துபாயின் இரண்டு விமான நிலையங்களின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டை துபாய் விமான நிலையங்கள் நிர்வகிக்கிறது. 

பயணிகளுக்கு தேவையான சேவைகளை வழங்குதல் விமான நிலையத்தில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்தல் ஆகியவை துபாய் விமான நிலையங்களின் முக்கியமான நோக்கமாகும். 

முகமது பின் ரஷீத் வீட்டுவசதி நிறுவனம்

முகமது பின் ரஷீத் வீட்டுவசதி நிறுவனம் என்பது எமிராட்டிகளுக்கு மலிவான, தரமான மற்றும் நீண்டகால வசதி உள்ள வீடுகளை வழங்க உருவாக்கப்பட்ட ஒரு அரசு அமைப்பு. இதன் மூலம் வீடு கட்ட உதவித்தொகை, வீட்டுக் கடன் அல்லது கட்டி முடிக்கப்பட்ட வீடு பயனர்களுக்கு வழங்கப்படும். பழைய வீட்டை புதுப்பிக்க வேண்டியவர்களுக்கு ரெனோவேஷன் ஆதரவையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

துபாய் மகளிர் நிறுவனம்

எமிராட்டி பெண்களின் தொழில்முறை மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்காக 2006ஆம் ஆண்டு துபாய் மகளிர் நிறுவனம் (DWE) நிறுவப்பட்டது. இதன் அதிகாரம் அளித்தல், தேசிய முன்னேற்றத்திற்கு அவர்களின் தீவிர பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் துபாயின் சமூக-பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் எமிராட்டி பெண்களின் முக்கிய பங்கு வலுப்பெறும். 

நெடா- தொழில்முறை தொடர்பு கழகம்

நெடா- தொழில்முறை தொடர்பு கழகம் என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். இது காவல்துறை, சிவில் பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முக்கிய அரசு துறைகளுக்கு இடையே குறியாக்கப்பட்ட (encrypted) வயர்லெஸ் தொலைத்தொடர்பு சேவையை வழங்குகிறது. 

முகமது பின் ரஷீத் விண்வெளி மையம்

2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முகமது பின் ரஷீத் விண்வெளி மையம் (MBRSC) அமீரகத்தின் விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில்  விண்வெளி தொடர்பான ஆய்வுகள், செயற்கைகோள் தயாரித்தல், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளித்தல், காலநிலை மற்றும் நகர வளர்ச்சி சூழலை கண்காணித்தல் போன்ற முக்கிய விண்வெளி தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

சட்ட அமலாக்க அமைப்புகள்

சட்ட அமலாக்க அமைப்புகள் என்பது நாட்டின் பாதுகாப்பை காக்கும், சட்டத்தை அமல்படுத்தும், குற்றங்களை தடுக்கும் அரசு அமைப்புகளை குறிக்கிறது. 

துபாய் சிவில் பாதுகாப்பு 

துபாய் சிவில் பாதுகாப்பு என்பது தீயணைப்பு மற்றும் மீட்பு துறையாகும். கட்டிடங்கள், வீடுகள், தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துக்களை கட்டுப்படுத்துவது, ஆபத்துகளில் இருந்து மக்களை மீட்பது, கட்டிடங்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்குவது, பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அளிப்பது போன்ற செயல்பாடுகளுக்கு இத்துறை பொறுப்பாகும். 

துபாய் காவல்துறை 

துபாய் காவல்துறை ஜூன் 01, 1956 அன்று முதல் செயல்பட்டு வருகிறது. நகரின் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் விதமாக வாரத்தின் 7 நாட்களும் துபாய் காவல்துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். துபாய் காவல்துறையின் தலைமையகம் அல் தவார் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது துபாய் காவல்துறையில் 30,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். 

அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் 

குடியிருப்பாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFAD) செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் குடியிருப்பாளர்களுக்கு விசா செயல்பாடுகள், குடியேற்ற செயல்பாடுகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். மொத்தத்தில், துபாயில் வசிக்கும் அல்லது துபாய்க்கு வருகிற ஒவ்வொருவரின் அடையாளம் மற்றும் ஆவணங்களை கண்காணித்து, அனைத்தும் சட்டப்படி நடைபெறுவதை உறுதிசெய்யும் துறையாகும்.

கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் 

துபாயில் வசிக்கும் மாணவர்களுக்காக அரசு சார்பில் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

முகமது பின் ரஷீத் அரசுப் பள்ளி

முகமது பின் ரஷீத் அரசுப் பள்ளி (MBRSG) என்பது துபாய் அரசாங்கத்தின் முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இங்கு மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் பயிற்சி பற்றைகள் நடைபெறுகிறது. 

ஹம்தான் பின் முகமது ஸ்மார்ட் பல்கலைக்கழகம்

2002ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஹம்தான் பின் முகமது ஸ்மார்ட் பல்கலைக்கழகம் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் டிஜிட்டல் முறையில் இயங்கும் முதல் பல்கலைக்கழகமாகும்.

இங்கு இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் போன்ற உயர்கல்வி படிப்புகள் முழுவதும் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகம் துபாய் இளவரசர் மாண்புமிகு  ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல்  மக்தூம் அவர்களால் வழிநடத்தப்படுகிறது. 

துபாய் நீதித்துறை நிறுவனம்

துபாயின் நீதித்துறை தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட துபாய் நீதித்துறை நிறுவனம், சட்டம் பயில விரும்புவோருக்கு சட்ட கல்வியை வழங்குகிறது. அத்துடன் சட்டம் தொடர்பான உயர்தர ஆராய்ச்சி, மற்றும் தொழில்முறை மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

கவுன்சில்கள்

துபாய் அரசின் முக்கிய முடிவெடுக்கும் குழுக்களாக கவுன்சில்கள் விளங்குகிறது. ஒவ்வொரு கவுண்சிலும் ஒரு குறிப்பிட்ட துறையை பார்த்துக்கொண்டு, அந்த துறைக்கான கொள்கைகள், திட்டங்கள், விதிகள் ஆகியவற்றை உருவாக்குகிறது.

துபாய் விளையாட்டு கவுன்சில்

துபாய் விளையாட்டு கவுன்சில் என்பது துபாயில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு பொறுப்பான அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இந்த கவுன்சில் துபாயின் ஏழு உள்ளூர் விளையாட்டுக் கழகங்களின் பணிகளை மேற்பார்வையிடுகிறது மற்றும் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. இதனால் துபாய் விளையாட்டு கவுன்சில் சார்பில் வருடந்தோறும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

துபாய் நிர்வாகக் குழு

துபாய் நிர்வாகக் குழு என்பது நகரின் நிர்வாக விவகாரங்களை மேற்பார்வையிடும் அரசாங்க அமைப்பாகும். இதில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பொருளாதாரம், சுற்றுச்சூழல் போன்ற முக்கிய அரசு துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நகரின் வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த குழு துபாய் இளவரசரால் தலைமை தாங்கப்படுகிறது. 

உச்ச எரிசக்தி கவுன்சில்

துபாயில் எரிசக்தி துறையில் பயனுள்ள செயல்திட்டங்களை உச்ச எரிசக்தி கவுன்சில் செய்து வருகிறது. பாதுகாப்பான எரிசக்தி விநியோகம் மற்றும் திறமையான எரிசக்தி பயன்பாடு மூலம் துபாயின் பொருளாதார வளற்சிக்கு இத்துறை பங்களிக்கிறது.

பொருளாதார நோக்கங்களை பூர்த்தி செய்யும் அதே வேளையில், சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாது வகையில் எரிசக்தி விநியோகத்தின் நிலைத்தன்மையை உச்ச எரிசக்தி கவுன்சில் உறுதி செய்கிறது. 

நீதித்துறை நிறுவனங்கள்

துபாயில் ஏற்படும் குற்றங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க அரசால் நீதித்துறை நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

துபாய் நீதிமன்றங்கள்

சட்டம், சிவில் மற்றும் குடும்ப வழக்குகளை கையாள துபாய் நீதிமன்றங்கள் கீழ் மூன்று நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு நிதிமாண்டங்களின் கீழ் மூன்று நிலைகள் உள்ளன. அவை முதல் நிலை நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் வழக்கு விசாரணை நீதிமன்றம் ஆகும்.

முதல் நிலை நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கும். அந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும். இங்கு வழக்கு மறு பரிசீலனை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். 

இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்தால் துபாய் நீதித்துறை அமைப்பில் மிக உயர்ந்த நீதிமன்றமான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும். இங்கு வழக்கின் உண்மைகள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்குப் பதிலாக, கீழ்நிலை நீதிமன்றங்கள் தீர்ப்பில் சட்டப் பிழைகள் உள்ளதா என்பது குறித்து மதிப்பாய்வு செய்யப்படும்.

துபாய் பொது வழக்குரைஞர்

துபாய் பொது வழக்குரைஞர் (DPP) என்பது அரசு சார்பில் குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வது, விசாரணை நடத்துவது மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகளை முன்வைப்பது போன்ற பொறுப்புக்களை நிர்வகிக்கும் அதிகாரப்பூர்வ அரசு அமைப்பாகும்.

துபாயில் எந்த குற்றச்செயலும் நடைபெறும்போது, காவல்துறையினர் முதலில் விசாரணை செய்கிறார்கள். விசாரணை முடிந்த பிறகு, வழக்கு பொது வழக்கறிஞருக்கு அனுப்பப்படும்.

மையங்கள்

துபாய் புள்ளிவிவர மையம்

துபாய் புள்ளிவிவர மையம், 2023ஆம் ஆண்டின் சட்டம் எண். 24 இன் கீழ் நிறுவப்பட்டது. இது அரசு நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் நகரம் சார்ந்த அதிகாரபூர்வ புள்ளிவிபர தரவுகளை வழங்கும். மேலும் அரசுத்துறைகளில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளுக்கு தேவையான தரவுகளை துபாய் புள்ளிவிவர மையம் வழங்கும்.

குறிப்பு: இந்த கட்டுரை வெளியிடும் போது துபாய் அரசின் கீழ் 13 துறைகள், 8 ஆணையங்கள், 10 பொதுத்துறை நிறுவனங்கள், 3 சட்ட அமைப்புகள், 3 கல்வி நிறுவனங்கள், 3 கவுன்சில்கள், 2 நீதித்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு தரவுகள் மையம் உள்ளன. காலப்போக்கில் மாறலாம்.. 

TAGGED: