மே 17 அன்று அபுதாபியின் அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள பராகா அணுமின் நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட 3 ட்ரோன்களில், 2 ட்ரோன்கள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன. மூன்றாவது ட்ரோன் அணுமின் நிலைய எல்லைக்கு வெளியே இருந்த ஒரு மின்சார ஜெனரேட்டர் மீது ட்ரோன் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தால் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், அணுமின் நிலையத்தின் கதிரியக்கப் பாதுகாப்பு அளவுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அபுதாபி ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டிலிருந்து தாக்குதல்:
அணுமின் நிலைய தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று ட்ரோன்களும், அதன்பின் கண்டறியப்பட்ட பிற ட்ரோன்களும் ஈராக் பகுதியிலிருந்துதான் அனுப்பப்பட்டன என்பதை ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும், நாட்டின் முக்கிய மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து அனுப்பப்பட்ட மொத்தம் 6 ட்ரோன்களை அமீரக பாதுகாப்புப் படை கண்டறிந்து அழித்துள்ளது.
சவூதி அரேபியா மீதான தாக்குதல்:
பராகா அணுமின் நிலையம் தாக்கப்பட்ட அதே நாளில், சவூதி அரேபியாவையும் நோக்கி ஈராக் வான்வெளியில் இருந்து ட்ரோன்கள் அனுப்பப்பட்டன. அவை சவூதி வான் எல்லைக்குள் நுழைந்தவுடன் தடுத்து அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சவூதி அரேபியாவிற்கு தனது முழு ஆதரவையும் வழங்கி உள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) விளக்கம்:
சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), இந்த விபத்திற்குப் பிறகும் கதிரியக்க அளவு சாதாரணமாகவே உள்ளது என்று அமீரகம் தங்களுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.
தற்காலிகமாக அணுமின் நிலையத்தின் 3-வது யூனிட்டிற்கு (Unit 3) அவசரக்கால டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.
மே 18 அன்று, அந்த 3-வது யூனிட்டிற்கு வழக்கமான மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு நிலைமை சீரானது.
IAEA அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் குரோசி (Rafael Grossi), “அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணுசக்தி பாதுகாப்புடன் தொடர்புடைய இடங்களை ஒருபோதும் இராணுவத் தாக்குதல்களுக்கு இலக்காக்கக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.
அமீரகத்தின் கருத்து:
அமீரக அதிபரின் அரசியல் ஆலோசகர் அன்வர் கர்காஷ் கூறுகையில், “யாரும் அமீரகத்தை மிரட்ட முடியாது. நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பார்வையை யாராலும் சீர்குலைக்க முடியாது” என்று உறுதியளித்தார். மேலும், இந்தத் தாக்குதல் பொதுமக்களின் உயிரை மதிக்காத ஒரு “பயங்கரவாதச் செயல்” என்றும் சாடினார்.
அமீரக வெளியுறவு அமைச்சகம் (MoFA), அமைதியான முறையில் செயல்படும் அணுசக்தி நிலையங்களை இலக்காகக் கொள்வது சர்வதேச சட்டம், ஐநா சாசனம் மற்றும் மனிதநேயச் சட்டங்களை மீறும் ஒரு ஆபத்தான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று கூறியுள்ளது.
வளைகுடா நாடுகளின் கண்டனம்
சவூதி அரேபியா: இத்தகைய தாக்குதல்கள் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன என்று கூறியுள்ளது.
குவைத்: இது ஒரு கொடூரமான செயல் என்றும், பொதுமக்களின் இடங்களைத் தாக்குவதை எந்த சட்டமும் ஏற்காது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைன்: இது சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2817-ஐ மீறும் செயல் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஓமன்: இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், தனது பாதுகாப்பை உறுதி செய்ய அமீரகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளது.
