430 விமானங்கள் ஒரே நேரத்தில்… வேகமெடுக்கும் DWC விமான நிலைய விரிவாக்க பணிகள்

துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய (DWC) விரிவாக்கத் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் 2032ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரும் என துபாய் இளவரசர் தெரிவித்துள்ளார்.

துபாயின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களில் முக்கியமான ஒன்றான அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2032ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது சுமார் AED 13 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 15 மாதங்களில் மட்டும் இத்திட்டத்திற்காக 10 மில்லியனுக்கும் அதிகமான வேலை நேரங்கள் செலவிடப்பட்டுள்ளன. மேலும், வரும் மாதங்களில் AED 55 பில்லியன் மதிப்பிலான முக்கிய வியூகத் திட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்படவுள்ளதாக துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

பொருளாதார வளர்ச்சியின் அடுத்த அடித்தளம்

துபாயின் விமானப் போக்குவரத்துத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய மிக முக்கியமான உள்கட்டமைப்பு முதலீடாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது. வான்வழிப் போக்குவரத்து, வர்த்தகம், சுற்றுலா மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தயாராகும் வகையில், துபாய் இந்த விரிவாக்கப் பணியை முன்னெடுத்து வருகிறது. 

துபாயின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி உத்திக்கு அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் மிகப்பெரிய பக்கபலமாக அமையும் என துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் அவர்கள் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “துபாயின் பொருளாதார செயல் திட்டமான ‘D33 Agenda’-வின் இலக்குகளை அடைவதில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தத் திட்டம், நமது விமானப் போக்குவரத்துத் துறையின் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்துவதோடு, துபாயின் ஒட்டுமொத்த போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பின் செயல்திறனையும் பல மடங்கு மேம்படுத்தும்” என்றார்.

அல் மக்தூம் விமான நிலையத்தின் வியப்பூட்டும் வசதிகள்

முதற்கட்ட பணிகள் விரிவாக்க முழுமையாக நிறைவடையும் போது இவ்விமான நிலையம் கொண்டிருக்க போகும் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மற்றும் கொள்ளளவு (Annual capacity) விவரங்கள் இதோ:

  • ஆண்டுதோறும் 260 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாளும் அசாத்திய திறன் கொண்டதாக இது அமையவுள்ளது.
  • ஆண்டுக்கு 12 மில்லியன் டன் ஏர் கார்கோ கையாளப்படும்.
  • விமானங்கள் எவ்வித தாமதமும் இன்றி தங்கு தடையின்றி இயங்குவதற்கு வசதியாக 5 அதிநவீன ஓடுபாதைகள் அமைக்கப்படுகின்றன.
  • பயணிகளின் வருகை மற்றும் புறப்பாட்டை எளிதாக்க இரண்டு மாபெரும் முனையங்கள் செயல்படவுள்ளன.
  • முனையங்களுக்குள் பயணிகள் எளிதாகச் சென்று வர 7 Concourses உருவாக்கப்படுகின்றன.
  • இங்கு ஒரே நேரத்தில் 430 விமானங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

TAGGED: