குழந்தைகளின் மூளையை பாதிக்கும் Social Media… கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய அமீரகம்

அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அமீரக அமைச்சரவை ஜூன் 18 அன்று ஒரு புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி, நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகப் தளங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 15 முதல் 16 வயது வரையிலான சிறுவர்கள் சில கடுமையான கட்டுப்பாடுகளுடன் சமூக ஊடகங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, அமீரகத்தில் உள்ள குழந்தைகள் தினசரி சராசரியாக மூன்று மணி நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. குழந்தைகள் நீண்ட நேரம் சமூக ஊடகங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக பதட்டம், கவனச்சிதறல், கல்வித் திறனில் பின்னடைவு மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்

பெற்றோர் அனுமதித்தாலும் விலக்கு இல்லை: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களில் சொந்தமாக தனிப்பட்ட கணக்குகளை உருவாக்கவோ, பயன்படுத்தவோ அல்லது அதன் முழுமையான அம்சங்களை அணுகவோ முடியாது. பெற்றோர்கள் அதற்கு அனுமதி அளித்தாலும் கூட, சட்டப்படி விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது.

15 – 16 வயதினருக்கான கட்டுப்பாடுகள்: இந்த இடைப்பட்ட வயதில் உள்ள குழந்தைகளின் கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வளையங்கள் உருவாக்கப்படும். வயதுக்கு ஏற்ற உள்ளடக்கக் கட்டுப்பாடுகள், அதிக ஆபத்துள்ள அம்சங்களை முடக்குதல், திரை நேரம் மற்றும் பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பெற்றோரின் கண்காணிப்பு வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

12 மாத காலக்கெடு: அமீரகத்தில் இயங்கும் சமூக ஊடக நிறுவனங்கள் இந்த புதிய விதிகளை படிப்படியாக அமல்படுத்துவதற்கும், உரிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் அதிகபட்சமாக 12 மாதங்கள் (ஓராண்டு) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மூளையை பாதிக்கும் சமூக ஊடக அடிமைத்தனம்

சமூக ஊடக தளங்கள் மனித மூளையில் Dopamine என்ற வேதிப்பொருளை சுரக்கத் தூண்டுவதாக நிபுணர்கள் விளக்குகிறார்கள். இது பயனர்களை தொடர்ந்து அந்த தளங்களை பயன்படுத்த வைக்கும் ஒரு உந்துதலை உருவாக்குகிறது.

சமூக ஊடகங்களில் கிடைக்கும் ஷேர்கள், லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் மூளையின் Reward centre எனப்படும் மகிழ்ச்சியைத் தூண்டும் பகுதியை செயல்படுத்துகின்றன. இது சூதாட்டம் அல்லது போதைப்பொருள் பயன்பாட்டின் போது ஏற்படும் அதே போன்றதொரு தற்காலிகப் இன்ப உணர்வை உருவாக்குவதால், சிறுவர்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களை நோக்கி ஈர்க்கப்பட்டு அதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

ஏற்கனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா போன்ற நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் இதே போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், தற்போது அமீரகமும் இந்த முக்கியப் பாதுகாப்பு பட்டியலில் இணைந்துள்ளது.

TAGGED: