எதிஹாட் ரயில் பயணம் தொடக்கம் முதல் கடும் வெப்ப எச்சரிக்கை வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

AI பூங்கா வடிவமைப்பு போட்டி: வெற்றி பெறுபவருக்கு AED 200,000 பரிசு!

துபாயில் உள்ள அல் சஃபா 2 பூங்காவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறுவடிவமைப்பு செய்வதற்கான  போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பரிசுத்தொகை AED 200,000. 

துபாய் அல் சஃபா 2 பூங்காவை AI தொழில்நுட்பம் மூலம் மறுவடிவமைப்பு செய்வதற்கான போட்டியை அறிவித்துள்ளது. இதில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 15.  வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு: AED 100,000, இரண்டாம் பரிசு: AED 65,000, மூன்றாம் பரிசு: AED 35,000 ஆகும்.  விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://aipark.dm.gov.ae/ai-competition

கட்டிடக்கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், AI தொழில்நுட்ப Startup நிறுவனங்கள் மற்றும் AI மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கலாம்.

அமீரகத்தில் கடும் வெப்ப எச்சரிக்கை

அமீரகத்தில் ஜூலை 3 முதல் ஆக. 10 வரை, கோடைகாலத்தின் உச்சகட்டமாகக் கருதப்படும் Jamrat Al Qayth பருவம் நிலவவுள்ளதால், இந்தக் காலத்தில் வெப்பநிலை 50°C-ஐ தாண்டக்கூடும் என அமீரக வானியல் சங்கம் தெரிவித்துள்ளது. 

வரும் ஜூலை முதல் அமீரகத்தில் கோடை வெப்பம் உச்சத்தை எட்டும் என்று அமீரக வானியல் சங்கம் தெரிவித்துள்ளது. கோடைகாலத்தின் உச்சகட்டமாகக் கருதப்படும் Jamrat Al Qayth பருவம் நிலவவுள்ளதால், ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 10 வரை வெப்பநிலை 50°C-ஐ தாண்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Jamrat Al Qayth என்பது “கோடையின் தணல்” என்று பொருள்படும். அரேபிய தீபகற்பத்தில் ஆண்டுதோறும் நிலவும் மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட 40 நாட்களைக் குறிக்க இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது.

ஆகஸ்ட் 14 முதல் விமான சேவை மீண்டும் தொடக்கம் 

தேவையான அனுமதிகள் கிடைத்ததைத் தொடர்ந்து, போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்டிருந்த மதுரை–அபுதாபி இடையிலான விமான சேவையை ஆகஸ்ட் 14 முதல் இண்டிகோ மீண்டும் தொடங்குவதாக  இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

ஜூலை 1 முதல் கட்டணங்கள் உயர்வு

அமீரகத்தில்   ஜூலை 1 முதல் இந்திய பாஸ்போர்ட் கட்டணங்கள் சுமார் 70% வரை உயர்த்தப்பட்டுள்ளன.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறைக்கு AED 450, தட்கல் முறைக்கு AED 900 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தட்கல் சேவையில்  36 பக்க பாஸ்போர்டிற்கு AED 900 எனவும், 60 பக்க பாஸ்போர்டிற்கு AED 1,080 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் சாதாரண முறையில் AED 900,  தட்கல் முறையில் AED 1,350 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பயணத்தைத் தொடங்கிய  எதிஹாட் ரயில்!

அமீரகத்தின் முதல் பயணிகள் ரயிலான ‘எதிஹாட் ரயில்’ ஜூலை 1 முதல் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தைத் தொடங்கியது. அபுதாபியில் அதிகாலை 5:34 மணிக்குச் புறப்பட்ட இந்த ரயில், காலை 7:15 மணிக்கு புஜைராவை வந்தடைந்தது.

அபுதாபியில் இருந்து புஜைரா வரையிலான சாலை வழிப் பயணத்திற்கு வழக்கமாக 2.5 மணி நேரத்திற்கும் மேலாகும். ஆனால், எதிஹாட் ரயில் இந்த தூரத்தை வெறும் 1 மணி நேரம் 41 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.

TAGGED: