இன்று உலகமே வியந்து பார்க்கும் உள்கட்டமைப்போடும், நவீன தொழில்நுட்பத்தோடும் மிளிரும் ஐக்கிய அரபு அமீரகம், ஒரே நாளில் உருவானது அல்ல. கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனித நாகரிகம் தொடங்கி, பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம், உள்நாட்டுப் போராட்டம் எனப் பல வரலாற்றுத் திருப்பங்களைக் கடந்துதான் இன்றைய வலிமையான கூட்டமைப்பாக அமீரகம் உருவெடுத்துள்ளது. அதன் சுவாரசியமான வரலாற்றுப் பரிணாமத்தை இந்த கட்டுரையில் காண்போம்.
1. பசுமை முதல் வறட்சி வரை: தொல்பழங்காலம் (கி.மு. 6000 – 3500)
அமீரகத்தின் வரலாறு கி.மு. 6000-ல், அரேபிய தீபகற்பத்தில் வாழத் தொடங்கிய புதிய கற்கால மனிதர்களிடம் இருந்து தொடங்குகிறது. அப்போது இப்பகுதி வெறும் “அரேபிய தீபகற்பம்” என்றுதான் அழைக்கப்பட்டது.
இக்காலத்தில் வாழ்ந்த பெடூயின் (Bedouin) பழங்குடி மக்கள் மீன்பிடித்தல் மற்றும் தாவரங்களைச் சேகரித்து எளிய வாழ்க்கை வாழ்ந்தனர்.
ஷார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட மெசொப்பொத்தேமியா (Mesopotamia) பாணி மண்பாண்ட எச்சங்கள், அதாவது கருப்பு வடிவங்கள் வரையப்பட்ட பச்சை-மஞ்சள் நிற மண்பாண்ட எச்சங்கள் இவர்களின் ஆரம்பகால உலகளாவிய வர்த்தகத் தொடர்பைக் காட்டுகின்றன.
கி.மு. 5000 காலகட்டத்தில் இப்பகுதியில் நல்ல மழைப்பொழிவு இருந்தது. மக்கள் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டனர். ஆனால், கி.மு. 4000க்குப் பிறகு காலநிலை வறட்சியாக மாறியதால் இந்த ஆரம்பகால நாகரிக வாழ்க்கை முற்றிலும் சரிந்தது. இதனால் மக்கள் புதிய வாழ்வாதாரங்களைத் தேட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
2. உலோகக் காலத்தின் எழுச்சி (கி.மு. 3200 – 300)
கடுமையான வறட்சியிலும் மனித இனம் எவ்வாறு பிழைத்து முன்னேறியது என்பதற்கு இக்காலகட்டம் ஒரு சிறந்த சான்று.
நாகரிகத்தின் அடுத்த கட்டமாக வெண்கல மற்றும் இரும்புக் காலங்கள் அமைந்தன. வெண்கலக் காலம் ஜெபல் ஹஃபீத், உம் அல் நார், வாடி சுக் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அபுதாபியின் அல் அய்ன் மற்றும் ஓமன் கடற்கரை பகுதிகளுக்கு இடையே பிரம்மாண்ட நிலத்தடி கூட்டுத் தட்டுக் கல்லறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது இவர்களின் தனித்துவமான இறுதிச்சடங்கு முறையை உணர்த்துகின்றன.
ஃபலாஜ் (Falaj) நீர்ப்பாசனம்: இரும்புக் காலத்தில் (கி.மு. 1300) வறண்ட காலநிலையைச் சமாளிக்க ‘ஃபலாஜ்’ எனப்படும் நிலத்தடி நீர்ப்பாசன முறையை மக்கள் உருவாக்கினர். இது தொடர் விவசாயத்திற்கு வழிவகுத்தது. மேலும், இக்கால மக்கள் தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு ஆயுதங்களை உருவாக்க சொந்தமாக உலோகத் தொழிற்சாலைகளையும் நடத்தியுள்ளனர்.
3. இஸ்லாத்தின் வருகையும் வர்த்தகச் செழிப்பும் (கி.பி. 630 – 1258)
கி.பி. 630-ல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதர்கள் மூலம் வளைகுடா பகுதிக்கு இஸ்லாம் அறிமுகமானது. மக்கள் இதனை மனமுவந்து ஏற்றனர். இதன் மூலம் இப்பகுதியில் ஒரு புதிய ஆன்மீக மற்றும் கலாச்சார யுகம் தொடங்கியது.
உமையா மற்றும் அப்பாஸியர் ஆட்சிக்காலத்தில், இப்பகுதி ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் பிரதான கடல் வர்த்தக மையமாக மாறியது. இவர்களின் கப்பல் கட்டும் கலை உலகப் புகழ்பெற்றதாக விளங்கியது.
4. ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கப் போட்டி (கி.பி. 1498 – 1968)
வளைகுடா பகுதியின் அமைவிடமும் முத்து வர்த்தகமும் ஐரோப்பிய நாடுகளைக் கவர்ந்தன. இதனால் இப்பகுதி மூன்று முக்கிய ஆதிக்கக் கட்டங்களைக் கடந்தது.
போர்ச்சுகீசியர் காலம் (1498 – 1650):
வாஸ்கோடகாமாவின் கடல்வழிப் பயணத்தைத் தொடர்ந்து, 1515-இல் போர்ச்சுகீசியர்கள் தங்களின் ராணுவ பலத்தால் இப்பகுதியைக் கைப்பற்றினர். மிளகு மற்றும் மசாலா வர்த்தகத்தில் தங்களின் ஏகபோக உரிமையை நிலைநாட்டினர். பின்னர், 1633-1650 காலகட்டத்தில் உள்ளூர் ‘யஅராபி’ (Ya’arabi) வம்சாவளிப் படைகள் இவர்களை இப்பகுதியிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றின.
டச்சுக்காரர்கள் காலம் (1622 – 1750):
போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, டச்சுக்காரர்கள் பட்டு வர்த்தகத்தின் மூலம் பெரும் லாபம் ஈட்டி, தங்களது கடற்படை ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். எனினும், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களுடன் ஏற்பட்ட தொடர் மோதல்களால், 1750களில் டச்சு ஆதிக்கம் நலிவடைந்தது.
பிரிட்டிஷ் காலம் (1720 – 1968):
இந்தியாவிற்கான தங்களது வர்த்தகப் பாதையைப் பாதுகாக்கும் நோக்கில் பிரிட்டிஷார் இப்பகுதியில் தடம் பதித்தனர். 1820 இல் உள்ளூர் ‘கவாசிம்’ (Qawasims) படைகளைத் தோற்கடித்த அவர்கள், பிராந்திய ஷேக்குகளுடன் தொடர் உடன்படிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக இப்பகுதி ‘ட்ரூஷியல் ஸ்டேட்ஸ்’ (Trucial States) என்று அழைக்கப்பட்டது. இவ்வுடன்படிக்கையின்படி, பிரிட்டிஷ் பாதுகாப்புக்கு ஈடாக, உள்ளூர் எமிரேட்டுகள் தங்களது நிலப்பகுதியை வேறு எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் விற்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
5. ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறப்பு (1966 – 1971)
1968 இல் பிரிட்டிஷார் வளைகுடாப் பகுதியிலிருந்து முழுமையாக வெளியேறப் போவதாக அறிவித்தது, அமீரக வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
1966 இல் அபுதாபியின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களை, “ஒற்றுமையே பலம்” என்பதை உணர்ந்தார். துபாயின் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூமை அவர்களைச் சந்தித்து, ஒரு கூட்டமைப்பை உருவாக்குவது பற்றிப் பேசினார்.
1968 இல் ஒன்பது எமிரேட்டுகளின் ஆட்சியாளர்கள் கூடி விவாதித்தனர். இறுதியாக, 18 ஜூலை 1971 அன்று, ஆறு எமிரேட்டுகளின் ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) ஒரு சுதந்திர இறையாண்மை மிக்க நாடாக அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்தனர். அதன் பின் 1972 இல் ராஸ் அல் கைமாவும் இக்கூட்டமைப்பில் இணைந்தது.
“ஒற்றுமையிலும் இணக்கத்திலும், வளர்ந்து வரும் பிற நாடுகளுக்கு முன்மாதிரியாக நாம் திகழ முடியும்” என்ற ஷேக் சையத் அவர்களின் தீர்க்கதரிசனப் பார்வைதான் இன்றைய உலகப் புகழ்பெற்ற வல்லரசு அமீரகத்தின் அஸ்திவாரம்!
