AED 5-க்கு Driverless Taxi: துபாயின் Driverless Taxi பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!

உலகளவில் எதிர்கால போக்குவரத்து தொழில்நுட்பங்களை முதலில் சோதித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நகரங்களில் துபாய் முக்கிய இடம் பிடிக்கிறது. மெட்ரோ, பறக்கும் டாக்ஸி, தானியங்கி பேருந்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் Driverless Taxi சேவையையும் துபாய் அறிமுகப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக ஜுமைரா (Jumeirah) மற்றும் உம் சுகீம் (Umm Suqeim) பகுதிகளில் இந்த சேவை செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இலவசமாக இயக்கப்பட்ட இந்த சேவைக்கு தற்போது RTA மாற்றும் துபாய் டாக்சி நிறுவனம் இணைந்து அறிமுக விளம்பர விலையாக AED 5 என்ற குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த டாக்ஸியை யார் பயன்படுத்தலாம்?

இந்த சேவையை தற்போது பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தலாம். ஆனால், சாதாரண டாக்ஸி போல கையை காட்டி நிறுத்த முடியாது. Apollo Go செயலி மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணிக்க முடியும். 

எப்படி முன்பதிவு செய்வது?

Apollo Go App-ஐ பதிவிறக்கம் செய்து, உங்கள் பயண இடத்தைத் தேர்வு செய்தால் அருகிலுள்ள Driverless Taxi உங்களுக்கு ஒதுக்கப்படும்.

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த டாக்ஸி தற்போது குறிப்பிட்ட Pick-up மற்றும் Drop-off பகுதிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றியும் இறக்கியும் வருகிறது. அதனால், அருகிலுள்ள Bus Stop அல்லது குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு நீங்கள் நடந்து செல்ல வேண்டியிருக்கும். 

டாக்ஸிக்குள் ஏறிய பிறகு என்ன?

வாகனம் வந்ததும், வெளியே இருக்கும் திரையில் உங்கள் மொபைல் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிதிட்ட பிறகே கதவு திறக்கும்.

உள்ளே அமர்ந்தவுடன் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிந்ததை உறுதிப்படுத்திய பிறகே வாகனம் இயக்கத்தைத் தொடங்கும். 

ஓட்டுனர் இல்லாமல் பாதுகாப்பு எப்படி?

இந்த வாகனங்களில் ஏராளமான கேமராக்கள், சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிக்னல்களை அடையாளம் காண்பது, பாதசாரிகளுக்கு வழிவிடுவது, அருகிலுள்ள வாகனங்களை கண்காணிப்பது போன்றவற்றை வாகனமே தானாகச் செய்கிறது.

பயணம் முடிந்து இறங்கும்போது கூட, கதவைத் திறப்பதற்கு முன் வலது பக்க கேமரா காட்சியை திரையில் காட்டுகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்களை பார்த்துவிட்டு பாதுகாப்பாக இறங்க முடியும். 

உள்ளே என்னென்ன வசதிகள்?

பயணிகளின் வசதிக்காக இந்த டாக்ஸியில், மசாஜ் வசதியுள்ள இருக்கைகள், ஹீட்டிங் வசதி, Wireless Charging, USB Charging Ports, Cup Holders, அவசர உதவி பட்டன், போன்ற பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

தற்போது குறைந்த எண்ணிக்கையிலான Driverless Taxi-கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தாலும், அடுத்த சில ஆண்டுகளில் இதை 1,000-க்கும் மேற்பட்ட தானியங்கி டாக்ஸிகளாக விரிவுபடுத்த துபாய் திட்டமிட்டுள்ளது. மேலும், 2030-க்குள் துபாயில் நடைபெறும் மொத்த போக்குவரத்து பயணங்களில் 25% தானியங்கி போக்குவரத்தாக மாற்றுவது RTA-வின் இலக்காகும்.

TAGGED: