365 நாட்கள் செல்லுபடியாகும் புதிய பலமுறை நுழைவு உம்ரா விசாவை சவூதி அரசு, அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விசாவின் மூலம் அதிகபட்சமாக 90 நாட்கள் வரை சவூதியில் தங்க அனுமதி வழங்கப்படும்.
ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்காக 1 வருடம் செல்லுபடியாகும் (1-Year Validity) புதிய பலமுறை நுழைவு உம்ரா விசாவை (Multiple-Entry Umrah Visa) சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
அமீரகத்தில் வசிக்கும் பெரும்பாலான நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த விசாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட உம்ரா முகவர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விசா செல்லுபடி காலம்:
இந்த விசா 1 வருடம் வரை செல்லுபடியாகும்.
தங்கும் காலம்:
1 வருடத்திற்குள் மொத்தமாக 90 நாட்கள் வரை சவூதியில் தங்கலாம்.
பல முறை பயணம்:
1 வருடத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் சவூதிக்கு சென்று வரலாம். ஒவ்வொரு முறையும் புதிய விசா எடுக்கத் தேவையில்லை.
இந்த விசா உம்ரா செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சுற்றுலா அல்லது பிற காரணங்களுக்குப் பயன்படுத்த முடியாது.
கட்டணம்:
தோராயமாக AED 600 முதல் AED 650 வரை (ஏஜென்சியைப் பொறுத்து சிறிது மாறலாம்).
தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தால் 2 வேலை நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும்.
தேவையான ஆவணங்கள் (Required Documents):
- பாஸ்போர்ட் நகல்
- எமிரேட்ஸ் ஐடி நகல்
- திரும்புவதற்கான விமான டிக்கெட் (Return Flight Ticket)
- ஹோட்டல் முன்பதிவு விவரங்கள்
- உள்ளூர் போக்குவரத்து விவரங்கள் (Transportation Details)
ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் என்ன செய்ய வேண்டும்?
விசா 1 வருடத்திற்குச் செல்லுபடியாகும் என்றாலும், ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதிய ஹோட்டல் முன்பதிவு, விமான டிக்கெட் மற்றும் போக்குவரத்து விவரங்களை நுசுக் (Nusuk) ஆப்/தளத்தில் பதிவேற்றி அனுமதி பெற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பயணத்திட்ட தேதிகளிலேயே (Approved Dates) சவூதிக்குள் நுழையவும் வெளியேறவும் வேண்டும்.
குடும்பமாக விண்ணப்பிக்கலாமா?
குடும்பமாக சேர்ந்து பயணம் செய்ய முடியும். ஆனால் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாகவே விசா விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Saudi Vision 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விசா, உலகம் முழுவதும் இருந்து வரும் பயணிகள் தங்களின் உம்ரா பயணத்தை எளிதாகவும், டிஜிட்டல் முறையில் திட்டமிடவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
