எதிஹாட் ரயில் பயணிகளுக்கு புதிய ‘Rail to Road’ சேவை… இனி ரயில் நிலையத்திலேயே கார் வாடகைக்கு எடுக்கலாம்!

எதிஹாட் ரயிலில் பயணம் செய்பவர்களின் பயணத்தை இன்னும் வசதியாக மாற்றும் வகையில், புதிய ‘Rail to Road’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Thrifty Car Rental நிறுவனத்துடன் எதிஹாட் ரயில் மேற்கொண்டுள்ள ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம், பயணிகள் ரயிலில் இருந்து இறங்கியவுடன் அந்த நிலையத்திலேயே கார் வாடகைக்கு எடுத்து, தங்களது இறுதி இலக்குக்கு எளிதாகச் செல்ல முடியும்.

பயணம் இனி இன்னும் எளிது

ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு, டாக்ஸி அல்லது வேறு போக்குவரத்தைத் தேட வேண்டிய அவசியம் இல்லாமல், நேரடியாக வாடகைக் காரை எடுத்துப் பயணத்தைத் தொடரும் வசதியை இந்த சேவை வழங்குகிறது. குறிப்பாக, ரயில் நிலையத்திலிருந்து தூரத்தில் உள்ள இடங்களுக்கு செல்லும் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகளுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.

எப்படி முன்பதிவு செய்யலாம்?

பயணிகள் எதிஹாட் ரயில் App, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது Thrifty தளத்தின் மூலம் கார் முன்பதிவு செய்யலாம். மேலும், எதிஹாட் ரயிலின் 11 பயணிகள் நிலையங்களிலும் டிஜிட்டல் கியோஸ்க் மற்றும் உதவி மையம் (Assistance Desk) அமைக்கப்பட உள்ளது.

எதிர்காலத்தில், ரயில் டிக்கெட் மற்றும் கார் முன்பதிவை ஒரே நேரத்தில் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்த இரு நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றன.

500 கார்களுடன் சேவை தொடக்கம்

ஆரம்ப கட்டத்தில் சுமார் 500 கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப, கார் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று Thrifty தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் AED 10 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்து, புதிய வாகனங்கள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் AI அடிப்படையிலான முன்பதிவு மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தபடும் எதிஹாட் ரயில் 

எதிஹாட் ரயிலின் பயணிகள் சேவை தற்போது அபுதாபி – புஜைரா இடையே இயங்கி வருகிறது. வரும் செப்டம்பர் 30 முதல் Dubai Station (Jumeirah Golf Estates அருகே) மற்றும் ஷார்ஜாவின் Al Dhaid Station ஆகியவை திறக்கப்பட உள்ளன.

அதனைத் தொடர்ந்து, Madinat Zayed, Liwa, Al Sila, Al Dhannah, Al Mirfa மற்றும் ஷார்ஜா University City உள்ளிட்ட நிலையங்களும் 2026 இறுதி மற்றும் 2027 தொடக்கத்தில் கட்டம் கட்டமாக திறக்கப்பட உள்ளன.

முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு, எதிஹாட் ரயில் ஆண்டுக்கு சுமார் 1 கோடி (10 million) பயணிகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGGED: