அவசரகால சான்றிதழ் (Emergency Certificate), எக்சிட் பெர்மிட் (Exit Permit), எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) மற்றும் விசா ஆகிய சேவைகளைச் செய்து தருவதாகக் கூறி, போலி ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகள் குறித்து துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமீரகத்தில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக தொழிலாளர்கள், மோசடி கும்பல்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதாகத் தெரிவித்துள்ளது. உதவி செய்வதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் முகம் மற்றும் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை இந்த முகவர்கள் ஸ்கேன் செய்கின்றனர்.
பின்னர், அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் பெயரில் வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது, கடன் பெறுவது மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பெறுவது உள்ளிட்ட நிதி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அபராதம், பயணத் தடை (Travel ban) மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
பாதுகாப்பாக இருக்க தூதரகத்தின் வழிகாட்டுதல்கள்
- ரகசியத் தகவல்களைப் பகிர வேண்டாம்: பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐடி, முகம் மற்றும் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள், வங்கி விவரங்கள் போன்றவற்றை அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் எக்காரணம் கொண்டும் வழங்கக் கூடாது.
- அதிகாரப்பூர்வ மையங்களை மட்டுமே அணுகவும்: பயோமெட்ரிக் ஸ்கேன் தேவைப்பட்டால், அமீரக அரசின் அதிகாரப்பூர்வ மையங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். தனியார் ஏஜெண்டுகள் மூலம் பயோமெட்ரிக் ஸ்கேன் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- தூதரகத்திற்கு கைரேகை தேவை இல்லை: பாஸ்போர்ட் அல்லது அவசரகால சான்றிதழ் வழங்க துபாய் மற்றும் அபுதாபி இந்தியத் தூதரகங்கள் கைரேகை அல்லது முகம் ஆகிய பயோமெட்ரிக் விவரங்களை கேட்பதில்லை. அவ்வாறு கேட்பவர்கள் மோசடி செய்பவர்கள்.
சந்தேகத்திற்குரிய நபர்கள் அணுகினால், அவர்களின் விவரங்களைச் சரிபார்க்க பிரவாசி பாரதிய சகாயதா கேந்திராவை (Pravasi Bharatiya Sahayta Kendra) என்ற மையத்தை கீழ்கண்ட வழிகளில் தொடர்புகொள்ளலாம்:
- கட்டணமில்லா தொலைபேசி எண்: 80046342
- வாட்ஸ்அப் / SMS: 00971543090571
- மின்னஞ்சல்: pbsk.dubai@mea.gov.in
அமீரகத்தில் வசிக்கும் அல்லது வருகை தரும் அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து உடனடியாக இந்தியத் தூதரகம் அல்லது அமீரக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
