துபாய் ஆட்சியாளரின் புதிய புத்தகம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு 50% தள்ளுபடி வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

1

துபாய் ஆட்சியாளரின் புத்தகம் வெளியீடு

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது, ‘The Letters’ என்ற தனது புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இது அவரது ‘Lessons from Life’ புத்தகத்தின் இரண்டாம் பாகமாகும். இதில் மொத்தம் 26 கடிதங்கள் உள்ளன. முதல் கடிதத்தை அமீரக அதிபருக்கு சமர்ப்பித்துள்ளார். அதில், தான் பார்த்து வியந்த விஷயங்கள் குறித்து எழுதியுள்ளார். 

பொதுச் சேவையில் தனது 60 ஆண்டுகால அனுபவத்தையும், வாழ்க்கைக் பாடங்களையும் எதிர்கால தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதற்காக இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதிக விலைக்கு விற்கப்பட்ட பருந்து

ADIHEX 2026 கண்காட்சியின் கடைசி நாளான செப்டம்பர் 6ம் தேதி அரிய வகை வெள்ளை நிற பருந்து $571,000க்கு ஏலம் போனது. இதன் மூலம் அதிக விலைக்கு விற்கப்பட்ட பருந்து என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. 2021ம் ஆண்டு ரியாத்தில் நடந்த ஏலத்தில் $467,000க்கு விற்கப்பட்ட பருந்து தான் அதிகபட்சமாக இருந்தது.

இந்தப் பருந்து அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டது. தூய்மையான வெண்மை நிற இறகுகள் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் ஆகிய சிறப்பம்சங்களால், இது ஏலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அமீரக மற்றும் வளைகுடா நாடுகளின் பாரம்பரியத்தில் பருந்து வளர்ப்பு (Falconry) மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பழங்கால பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், சர்வதேச அளவில் சிறந்த வேட்டைப் பறவைகளை வெளிப்படுத்தவும் ADIHEX கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இனி நொடிகளில் Immigration சோதனை

Immigration சோதனையை 12 முதல் 15 வினாடிகளில் முடிக்க, துபாய் விமான நிலைய ஊழியர்களுக்கு ‘Click & Travel’ என்ற புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் மொபைல் வழியாக Facial Recognition மற்றும் மின்னணு முறையில் பாஸ்போர்ட்டை சோதனை செய்து பயணிகளை அனுமதிக்க முடியும்.

இதன் மூலம் பயணிகள் வழக்கமான இமிக்ரேஷன் வரிசைகளில் காத்து நிற்க வேண்டிய அவசியமில்லை. பணியாளர்கள் தங்களின் கைபேசி சாதனம் வாயிலாகவே பயணிகளின் தகவல்களைச் சரிபார்த்து நுழைவு/வெளியேற்ற அனுமதியை உடனடியாக வழங்கிவிடுவார்கள்.

மெட்ரோ நிலையம் பெயர் மாற்றம்

துபாயில் உள்ள Onpassive மெட்ரோ நிலையம், Garmin மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்காக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான RTA, Garmin நிறுவனத்தின் அமீரக விநியோகஸ்தரான AMIT Retail LLC நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

இந்தப் பெயர் மாற்றம் வரும் நவம்பர் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச், Fitness Tracker மற்றும் GPS சாதனங்களுக்காக Garmin நிறுவனம் உலகளவில் பிரபலமான பிராண்டாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், Onpassive மெட்ரோ நிலையத்தின் Naming Rights-ஐ AMIT Retail LLC நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 50% தள்ளுபடி

துபாயின் RTA, மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளில் 50% கட்டணத் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தச் சலுகையைப் பெற, Sanad Card அல்லது சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

துபாய் நகரத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற சிறந்த மற்றும் அணுகக்கூடிய நகரமாக மாற்றுவதற்கும், அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து அமைப்புகளை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TAGGED: