அபுதாபியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஷேக் சயீத் கிராண்ட் மசூதியை (Sheikh Zayed Grand Mosque) பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டண விவரங்கள்:
புதிய நடைமுறையின்படி, எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பவர்களுக்கு AED 5-ம், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு AED 10-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மசூதிக்கு தொழுகைக்காக வருபவர்களுக்குத் தொடர்ந்து கட்டணம் எதுவும் இல்லை.
மேலும், 60 வயதைக் கடந்த முதியவர்கள், 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு:
பார்வையாளர்கள் தங்களது வருகையை ‘ஷேக் சயீத் பெரிய மசூதி மையத்தின்‘ அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பே பதிவு செய்துகொள்ளலாம்.
பார்வையாளர் நேரம்:
சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 9:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை அனுமதி உண்டு. வெள்ளிக்கிழமைகளில் காலை 9:00 முதல் 11:30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 2:30 முதல் இரவு 8:30 மணி வரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
இலவச கலாச்சார வழிகாட்டுதல்:
30 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபெறும் கலாச்சார வரலாற்றுச் சுற்றுகளுக்குக் கட்டணம் இல்லை. இவை திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் காலை 11:00, பிற்பகல் 1:00 மற்றும் மாலை 5:00 மணிக்கு நடைபெறும் (வெள்ளிக்கிழமைகளில் காலை 11:00 மற்றும் மாலை 5:00 மணிக்கு மட்டும்).
